தமிழக கிராமங்களில் மூட நம்பிக்கையால் நாட்டு வைத்தியம் என்ற பெயரில் கால்நடைகளுக்கு கொடூரமான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் கீழ் 6 பன்முக கால்நடை மருத்துவமனைகள், 22 கால்நடை பெரு மருத்துவமனைகள், 139 கால்நடை மருத்துவ மனைகள், 1771 கால்நடை மருந்தகங்கள், 585 ஊரக மருத்துவப் பிரிவுகள், 850 கால்நடை கிளை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
ஆனால், பெரும்பாலான கிராமங்களில் இன்றளவும் கால்நடைகளை மருத்துவமனைக்கு அழைத்து வராமல், நாட்டு வைத்திய முறைகளையே கையாளு கின்றனர். இந்த வகை சிகிச்சைகளில் சில கொடூரமாக உள்ளன.
இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறையின் துணை இயக்குநர் டாக்டர் வி. ராஜேந்திரன் கூறியதாவது:
மனிதர்களின் மூடப்பழக்க வழக்கங்களால் கால்நடைகள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றன. ‘செலைக்குத்துதல்’ என்ற வழக்கப்படி கால்நடைகள் தீவனம் சாப்பிடாமல் இருந்தால், மாட்டின் நாக்கை வெளியே இழுத்து நாக்கின் அடிப்பாகத்தில் கூரிய ஊசியால் குத்தி விடுகிறார்கள்.
அப்போது சிறிது ரத்தம் வெளியேறும் . பின்னர் நாக்கை வைக்கோல் கயிறு கொண்டு மேல் தாடையோடு கட்டிவிடுவர். இதனால் ஏற்பட்ட வலியால் 2 நாட்களுக்கு மாடுகள் தீவனம் சாப்பிடாது. தானாக வலி குறைந்ததும், காய்ந்த மாடு கம்பங் கொல்லையில் விழுந்ததுபோல சாப்பிடத் தொடங்கும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில், உம்பளாச்சேரி இன மாடுகளுக்கு கொம்புகளை விட்டு வைப்பதில்லை. வளர்ந்த பிறகு கொம்புகள் சுடப்படுகின்றன. இளம் கன்றுகளாய் இருக்கும்போது கொம்புகளை வலியின்றி தீய்ப்பதற்கு, கால்நடை மருத்துவமனைகளில் மின்கருவிகள் உள்ளன.
‘நாவரஞ்சி எடுத்தல்’ என்ற வழக்கப்படி, தீவனம் தின்னாத மாடுகளின் நாக்கை வெளியே இழுத்து சமையல் உப்பு கொண்டு கையால் தேய்த்து விடுவார்கள். இதனால், ஏற்படுவது வலியும் எரிச்சலும்தான். அதிக நேரம் கால்நடைகளை வேலை வாங்குதல், உடம்பில் நீர்ச்சத்து குறைபாடு, போதிய அளவு நீர் கொடுக்காமல் இருப்பது போன்றவற்றால் சோர்வடைந்து விழுந்து விடுகின்றன.
அந்நேரத்தில் கால்நடைகளின் அருகே வைக்கோலைப் போட்டு கொளுத்துவர். சில மாடுகள் வெப்பம் தாங்காமல் எழுந்துவிடும். ஆனால், எல்லா நேரங்களிலும் இப்படி நடக்காது. சில மாடுகள் இப்படிச் செய்யும்போது நினைவிழந்து விடுகின்றன. கால்நடைகளுக்கு ஏற்படும் புண்களில் பினாயில் மற்றும் ஆர்கனோ பாஸ்பரஸ் தூள்களை இடுவது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போலாகும். கால்நடைகளுக்கு மருத்துவ உதவி அளிக்க கால்நடை மருத்துவரை நாடுவதுதான் நல்லது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.