தமிழகம்

வேற்றுமொழி பேசும் பிறர் தமிழ் கற்க ரூ. 37.36 லட்சம் நிதி வேண்டும்: தமிழ் பல்கலை. அரசுக்கு வேண்டுகோள்

கி.மகாராஜன்

தமிழை தாய்மொழியாகக் கொள்ளாதவர்களுக்கு அஞ்சல்வழி தொடர் கல்வியில் தமிழை கற்பிப்பதற்கு தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் கேட்டிருக்கும் உத்தேச செலவுத் தொகை ரூ. 37.36 லட்சத்தை தாமதமின்றி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மத்திய மனிதவள மேம்பா ட்டுத்துறை சார்பில், இந்தி மொழியை தாய்மொழியாக கொள்ளாத அனைத்து இந்தியர்களுக்கும் அஞ்சல் வழி கல்வி மூலம் ரூ.50 கட்டணத்தில் இந்தி கற்பிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் கடந்த 30 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது.

இதேபோல், தமிழ்மொழியை தாய்மொழியாக கொள்ளாத பிற மாநிலத்தவர்கள் அஞ்சல்வழி தொடர் கல்வி மூலம் தமிழை கற்பிக்க வசதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு 2011 ம் ஆண்டில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் சிந்தனை மன்றம் மனு அனுப்பியது.

இதையடுத்து, இதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்துக்கு அரசு உத்தரவிட்டது.

அது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட பல்கலைக்கழக பதிவாளர், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநருக்கு 19.5.2014-ம் தேதி கருத்துரு ஒன்றை அனுப்பினார். அதில், தமிழ் மொழியை இந்தியா முழுவதும் கற்பிக்க ஆண்டுதோறும் உத்தேசமாக ரூ.37 லட்சத்து 36 ஆயிரத்து 300 செலவாகும். இந்த தொகையில் 6 மாத சான்றிதழ் படிப்பிலும், ஓராண்டு பட்டயப் படிப்பிலும் முதலாம் ஆண்டில் ஆயிரம் மாணவர்களை சேர்த்து தமிழ் கற்பிக்கலாம்.

இந்தத் தொகையை தமிழக அரசு ஒதுக்கினால், திட்டத்தை தொடர முடியும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்த கருத்துருவை இயக்குநரும் ஏற்றுக் கொண்டார்.

பின்னர், பல்கலைக்கழகம் தெரிவித்துள்ள உத்தேச செலவு விவரம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருப்பதால், அந்த செலவின விவரத்தின் அடிப்படையில் உரிய ஆணை பிறப்பிக்குமாறு தமிழ் வளர்ச்சித்துறை துணைச் செயலருக்கு 11.2.2015-ம் தேதி பரிந்துரைக் கடிதம் அனுப்பினார். அதன்பிறகு, எந்த நடவடிக்கையும் இல்லை.

இது தொடர்பாக, பாரதியார் சிந்தனை மன்றச் செயலர் ரா. லெட்சுமிநாராயணன் ‘தி இந்து’-விடம் நேற்று மதுரையில் கூறியதாவது:

வட இந்தியர்கள் அனைவரும் தமிழை கற்க வேண்டும் என மகாத்மாகாந்தி தனது பிரகடனத்தில் தெரிவித்துள்ளார். மகாகவி பாரதியார், தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவச் செய்தல் வேண்டும் என்றும், சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்திடுவீர் என்றும் கூறியுள்ளார்.

சீன மொழியில் திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் கவிதைகளை மொழிபெயர்ப்பு செய்தவருக்கு தமிழக அரசு ரூ. 77.70 லட்சம் ஒதுக்கியுள்ளது. முதலில் இந்தியர்கள் அனைவரையும் தமிழ் கற்பிக்கச் செய்ய வேண்டும்.

வட இந்தியர்களுக்கு அஞ்சல் வழியில் தமிழை கற்பிக்க கடந்த 4 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.

அதற்காக தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் கேட்டுள்ள ரூ.37.36 லட்சம் சிறிய தொகை தான். அதை உடனடியாக ஒதுக்க வேண்டும். மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள ஜெயலலிதா, பதவியேற்றதும் தமிழ் அஞ்சல் வழி கல்விக்காக தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்துக்கு தேவையான நிதியை ஒதுக்கி முதல் உத்தரவு பிறப்பித்து தமிழுக்கு தொண்டாற்ற வேண்டும் என்றார்.

வடமாநிலங்களைச் சேர்ந்த வேற்றுமொழி பேசும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தமிழகத்தில் பல்வேறு அமைப்புசாரா தொழில் களில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ் மொழியை குறைந்த செலவில் பயிற்றுவிக்கும் திட்டத்தை தஞ்சை பல்கலைக்கழகத்தில் செயல்படுத்தினால் தேமதுரத் தமிழோசை இந்தியாவெங்கும் பரவும் என்பது தமிழ் ஆர்வலர்களின் கருத்தாகும்.

SCROLL FOR NEXT