ஒட்டன்சத்திரத்தில் பெண் வி.ஏ.ஓ. நேற்று தற்கொலைக்கு முயன்றார். உயர் அதிகாரிகள் நெருக்கடி காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்றதாக உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம் அருகே விநோபா நகரைச் சேர்ந்தவர் தமிழ்செல்வி. இவர் தேவத்தூர் வி.ஏ.ஓ.வாக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று வீட்டில் இருந்தபோது அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உயர் அதிகாரிகள் நெருக்கடியால் தமிழ்செல்வி தற்கொலைக்கு முயன்றதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் உறவினர்கள், அளித்த புகாரின்பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து காவல் கண்காணிப் பாளர் சரவணனிடம் கேட்டபோது, ஆவணங்களை முறையாக பராமரிக்கவில்லை என சமீபத்தில் வேடச்சந்தூர் லந்தகோட்டைக்கு தமிழ்செல்வி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதனால், கடந்த சில நாள்களாக அவர் மன உளைச்சலில் இருந்துள்ளார். வேறு காரணங்கள் இருக்கிறதா என விசாரிக்கிறோம் என்றார்.