ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
தமிழக முதல்வராக 5-வது முறையாக ஜெயலலிதா நேற்று பதவியேற்றுக் கொண்டார். இந்த பதவியேற்பு விழாவில் மத்திய கப்பல் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாஜக தலைவர்கள் இதில் பங்கேற்றபோதிலும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை.
இது குறித்து ‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது:
ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் பங்கேற்க எனக்கு அழைப்பு வரவில்லை. அதை நான் எதிர்பார்க்கவும் இல்லை, தனிப்பட்ட முறையில் எந்தவொரு தலைவரையும் நான் விமர்சித்ததில்லை. பாஜக மாநிலத் தலைவர் என்ற முறையில் தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கிறேன். தவறுகளை சுட்டிக்காட்டி வருகிறேன். நான் பாஜக தலைவரானபோது ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்தார். அதுபோல மீண்டும் முதல்வராகியுள்ள அவருக்கு நான் வாழ்த்து தெரிவித்தேன்.
பதவியேற்பு விழாவுக்கு மாநிலத் தலைவரை அழைக் காமல் மற்ற தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தது குறித்து நான் எதுவும் கூற விரும்பவில்லை. ஆட்சி வேறு, அரசியல் வேறு என்பதால் அரசு நிகழ்ச்சிகளுக்கு அரசியலை மறந்து அனைவரை யும் அழைக்க வேண்டும். மற்ற மாநிலங்களில் உள்ள இந்த நாகரிகம் தமிழகத்துக்கும் வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பதவியேற்பு விழாவில் பங்கேற்ற இல.கணேசனிடம் இதுபற்றி கேட்டபோது, ‘‘எங்களுக்கு அழைப்பு வந்தததால் பதவியேற்பு விழா வில் கலந்து கொண்டோம். இதனால் அதிமுகவும், பாஜகவும் நெருங்கி வருகிறது என கூற முடியாது. ஜெயலலிதா 5 ஆண்டுகள் முதல்வராக இருக்க வேண்டும் என்பது மக்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பாகும். இடையில் ஏற்பட்ட தடையையும் கர்நாடக உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது. மீண்டும் முதல்வராகியுள்ள ஜெயலலிதாவுக்கு வாழ்த்துகள்’’ என்றார்.
இந்நிலையில் மாநிலத் தலை வரை அழைக்காமல் மற்ற தலை வர்களுக்கு அழைப்பு விடுத்தது பாஜகவுக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.