தமிழகம்

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு ‘தி இந்து’ வழிகாட்டும் நிகழ்ச்சி: நாளை மாதா பொறியியல் கல்லூரியில் நடக்கிறது

செய்திப்பிரிவு

பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்கள் அடுத்ததாக என்ன படிக்கலாம் என்ற வழிகாட்டல் நிகழ்ச்சியை ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் மற்றும் மாதா பொறியியல் கல்லூரி இணைந்து நடத்துகின்றன. இந்நிகழ்ச்சி குன்றத்தூரில் உள்ள மாதா பொறியியல் கல்லூரி வளாகத்தில் நாளை நடக்கிறது.

இந்நிகழ்ச்சியில் தற்போதுள்ள படிப்புகளில் மாணவர்கள் எந்த படிப்பை தேர்ந்தெடுக்கலாம், எந்த படிப்புக்கு என்னென்ன வேலை வாய்ப்புகள் உள்ளன, மாணவர்களின் வெற்றியை நோக்கிய பயணம் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி மாணவர்களுடனும், பெற்றோர்களுடனும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துரையாடு வார்கள்.

பேராசிரியர் பர்வீன் சுல்தானா, மாணவர்கள் அடைய வேண்டிய சிகரம் எது, அதை நோக்கிய பயணம் எப்படி இருக்க வேண்டும் என்று பேசவுள்ளார். கல்வியாளர் மற்றும் காலக்சி மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் தலைவர் ரமேஷ் பிரபா, தற்போது இருக்கும் அனைத்து படிப்புகள் பற்றியும், அவற்றுக்கான வேலை வாய்ப்புகள் பற்றியும் பேசவுள்ளார்.

மாணவர்கள் ஒரு படிப்பை தேர்ந்தெடுக்கும் போது என்னென்ன விஷயங்களை கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழ் பல்கலைகழக முன்னாள் துணை வேந்தர் ம.திருமலை விளக்கவுள்ளார். ஆவணப் பட இயக்குநர் சாரோன், கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு என்னென்ன இடர்பாடுகள் ஏற்படும், அந்த தடைக்கற்களை எப்படி படிக்கற்களாக மாற்றுவது என்று பேசவுள்ளார். இவர்களுடன் மாதா பொறியியல் கல்லூரி தலைவர் டாக்டர்.எஸ்.பீட்டர் இந்நிகழ்வில் மாணவர்களுடன் கலந்துரையாடுவார்.

இந்நிகழ்ச்சி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடை பெறும். நிகழ்ச்சி முடிந்த பிறகு பங்கேற்கும் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்படும்.

பேருந்து வசதி

சென்னையின் பல்வேறு இடங்களிலிருந்து நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு மாதா பொறியியல் கல்லூரி, பேருந்து வசதி ஏற்பாடு செய்துள்ளது. மணலி, திருவொற்றியூர், பாரிமுனை, பாடி, கிண்டி, ஆவடி, பூந்தமல்லி, அடையாறு, மடிப்பாக்கம், தாம்பரம், செங்கல்பட்டு, போரூர் ஆகிய இடங்களிலிருந்து நிகழ்ச்சி அரங்குக்கு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு 9176990280 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

SCROLL FOR NEXT