தமிழகம்

விஜயகாந்த் இன்று சென்னை திரும்புகிறார்: பாஜகவுடன் கூட்டணியை இறுதி செய்ய முடிவு?

செய்திப்பிரிவு

தேமுதிக தலைவர் விஜயகாந்த், சிங்கப்பூரில் இருந்து இன்று சென்னை திரும்புகிறார். விரைவில் பாஜகவுடன் கூட்டணியை இறுதி செய்து அறிவிப்பார் என கூறப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் சில மாதங்களுக்கு முன்பே கூட்டணி அமைப்பதற்கான வேலைகளை தொடங்கிவிட்டன. அப்போதில் இருந்தே எல்லோருடைய எதிர்பார்ப்பும் தேமுதிக எந்தக் கூட்டணியில் சேரும் என்பதாகத்தான் இருக்கிறது.

பாஜக, திமுக, காங்கிரஸ் என பல தரப்பினரும் தேமுதிகவை கூட்டணிக்கு அழைத்தன. தேமுதிகவும் தனது முடிவை வெளிப்படையாக அறிவிக்காமல் எல்லா கட்சிகளுடனும் பேசி வந்தது. அந்தக் கட்சி தங்களுடன்தான் கூட்டணிக்கு வரும் என தமிழக பாஜகவினர் உறுதியுடன் கூறி வருகின்றனர். பாஜக – தேமுதிக கூட்டணி ஓரளவு இறுதியாகிவிட்டதாகவே கூறப்படுகிறது.

இதற்கிடையே, தேமுதிக தலைவர் விஜயகாந்த், மருத்துவ சிகிச்சைக்காக கடந்த 23-ம் தேதி சிங்கப்பூர் சென்றார். அவர் இன்று சென்னை திரும்புகிறார். இதையடுத்து, பாஜகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சை முடித்து, விரைவில் கூட்டணி பற்றி விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றும், அதன்பின் பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக தேமுதிக நிர்வாகிகள் கூறும்போது, ‘‘விஜயகாந்த், சிங்கப்பூரில் இருந்து திங்கள்கிழமை சென்னை திரும்புகிறார். யாருடன் கூட்டணி என்பதை அவர் முடிவு செய்து அறிவிப்பார்’’ என்றனர்.

பாஜக தரப்பிலோ ‘‘தேமுதிகவுடன் கூட்டணி குறித்து இன்னும் இறுதி முடிவு செய்யப்படவில்லை. ஆனால், விரைவில் கூட்டணி இறுதியாகிவிடும்’’ என்றனர்.

SCROLL FOR NEXT