தாம்பரம் அருகே ரூ.99 கோடி செலவில், குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் எரிபொருள் (செயற்கை நிலக்கரி) தயாரிக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.
சென்னையை அடுத்த தாம்பரம் மற்றும் பல்லாவரம் நகராட்சி பகுதியில் தினந்தோறும் தலா 110 டன் குப்பைகள் உருவாகின்றன. இவற்றை சேகரித்து நீர்நிலைகளின் அருகில் கொட்டி வந்தனர். இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நீதிமன்றங்களில் வழக்குகளும் போடப்பட்டன.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பல்லாவரம், தாம்பரம் நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை தனியார் பங்களிப்புடன் செயல்படுத்த அரசு முடிவு செய்தது. அதற்காக, ரூ.99 கோடி செலவில் தாம்பரத்தை அடுத்த வேங்கடமங்கலம் பகுதியில் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் கூடம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் முதல்கட்டமாக எரிபொருள் தயாரிக்கும் பணி இம்மாதம் தொடங்க உள்ளது.
இது தொடர்பாக பல்லாவரம் நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் கூடம் 50 ஏக்கர் பரப்பளவில் அமைக் கப்பட்டுள்ளது. குப்பைகளை நறுக்கி, அதிக வெப்பநிலையில் சூடேற்றி, உலர வைத்து எரி பொருளாக (செயற்கை நிலக்கரி) தயாரிப்பதற்கான கூடம் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. டென்மார்க், ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்து இதற்கான இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளன.
இந்த நிறுவனங்களைச் சேர்ந்த நிபுணர்கள் சில தினங்களில் இங்கு வந்து ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர். சோதனை ஓட்டத்துக்குப் பிறகு மே 15-ம் தேதி முதல் எரிபொருள் தயாரிக்கும் பணிகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம்.
இந்தக் கூடத்தில் தினமும் 300 டன் குப்பைகளை எரிபொருளாக்க முடியும். அந்த எரிபொருளைக் கொண்டு ஒரு மணி நேரத்துக்கு 3 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கலாம். மின்உற்பத்திக்கான கருவிகள் வெளிநாட்டிலிருந்து வரவுள்ளன. மின்சாரம் தயாரிக்கும் பணி அடுத்த 6 மாதங்களில் தொடங்கப்படும்.
பல்லாவரம் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கணபதிபுரம் குப்பை மாற்று கூடத்துக்கும், தாம்பரம் நகராட்சி குப்பைகள் கன்னடபாளையம் குப்பை மாற்று கூடத்துக்கும் கொண்டுவரப்படும். அங்கிருந்து 15 டன் கொள்ளளவு கொண்ட பெரிய வாகனங்கள் மூலம் வேங்கடமங்கலத்தில் உள்ள மின்சாரம் தயாரிக்கும் கூடத்துக்கு கொண்டு செல்லப்படும். அதற்காக 12 பெரிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.
விரைவில் அனகாபுத்தூர், பம்மல், செம்பாக்கம் நகராட்சி குப்பைகளும் இங்கு கொண்டுவரப்பட்டு எரிபொருளாக மாற்றப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.