இந்திய மக்கள் தொகையில் 8 சதவீதம் பேர் ஆஸ்துமாவால் அவதிப்படுவதாக நுரையீரல் சிறப்பு மருத்துவர் தெரிவித்துள்ளார்.
உலக ஆஸ்துமா தினம் இன்று (மே 5) கடைபிடிக்கப்படுகிறது. இது தொடர்பாக மதுரை மீனாட்சிமிஷன் நுரையீரல் சிறப்பு மருத்துவ நிபுணர் வேல்குமார் கூறியதாவது:
ஆஸ்துமா பரம்பரை நோயாகும். இது தொற்று நோயல்ல. முறையான மருத்துவம் மற்றும் மூச்சுப்பயிற்சி, தினமும் உடற்பயிற்சி செய்வதால் ஆஸ்துமாவை கட்டுப்படுத்தலாம். 60 சதவீத ஆஸ்துமா நோயை குழந்தை பிறந்த 5 வயதுக்குள் கண்டுபிடித்து குணப்படுத்தலாம்.
இந்திய மக்கள் தொகையில் சுமார் 8 சதவீதம் பேருக்கும், அமெரிக்காவில் 2.5 சதவீதம் பேருக்கும் ஆஸ்துமா பாதிப்பு உள்ளது. ஆஸ்துமாவை குணப்படுத்த தேவையான நவீன மருத்துவ வசதிகளும், மருந்துகளும் இந்தியாவில் உள்ளன. தூய்மையற்ற காற்று, சிகரெட் புகை, சீதோஷ்ண நிலை மாற்றங்களால் நோயின் தாக்கம் அதிகமாகும். செல்லப் பிராணிகளான பூனை, நாய் மூலமாகவும் ஆஸ்துமா பரவும். இவற்றினை தவிர்த்தால் நோய் வராமல் தடுக்கலாம்.
சுவாசத்தின்போது விசில் சத்தம், தொடர் இருமல், இரவில் அதிக இருமல், மார்பை சுற்றி ரப்பர் பாண்ட்டுகளை இறுக்கி கட்டியது போன்ற உணர்வு அல்லது எரிச்சல், சுவாசிப்பதில் சிரமம் ஆகியன ஆஸ்துமாவின் அறிகுறியாகும். ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த தினமும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும், நோயின் காரண காரியத்தை அறிந்து முறையாக சிகிச்சை பெற வேண்டும். தொடர்ந்து மருந்து உட்கொள்ளுதல், வெளியில் உணவு உட்கொள்ளாமல் இருத்தல், முறையாக இன்ஹெலரை பயன்படுத்துதல் ஆகியன ஆஸ்துமாவை குணப்படுத்தும் என்றார்.