திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பின்புறம் அமைந்துள்ள காமாட்சியம்மன் கோயில் அருகே நேற்று முன்தினம் இரவு, திருநங்கை ஒருவர், தலையில் வெட்டுக் காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். இதுகுறித்து திருப்பூர் டவுன் (பொ) கிராம நிர்வாக அலுவலர் கீதாஞ்சலி, தெற்கு போலீஸாருக்கு அளித்த தகவலின்பேரில், காவல் ஆய்வாளர் நெல்சன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த திருநங்கையை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முதல் கட்ட விசாரணையில், வெட்டுக்காயங்களுடன் மயங்கிக் கிடந்தவர் சரண்யா (எ) பழனிச்சாமி (46) என்பதும், திருநங்கையாக கடந்த 15 ஆண்டுகளாக திருப்பூரில் வாழ்ந்து வந்ததும், கோவை மாவட்டம் ராமசெட்டிபாளையம் சொந்த ஊர் என்பதும் தெரியவந்தது.
திருப்பூரில் இருந்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சைப் பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார்.