தமிழகம்

கல்வி, வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடு மசோதாவால் திருநங்கைகள் மீதான பாலியல் முத்திரை விலகும்: மிஸ் சென்னை நமீதா நம்பிக்கை

கி.மகாராஜன்

திருநங்கைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு வழங்கும் மசோதா அமலுக்கு வந்தால், எங்கள் மீதான பாலியல் முத்திரை விலகும் என மிஸ் சென்னையாக தேர்வான திருநங்கை நமீதா நம்பிக்கை தெரிவித்தார்.

சென்னையைச் சேர்ந்த திருநங்கை எம்.நமீதா என்கிற நிஷா. பொறியியல் பட்டதாரியான இவர், கடந்த ஆண்டு மிஸ் கூவாகமாகத் தேர்வானார். இந்த ஆண்டு மிஸ் சென்னை, மிஸ் புதுச்சேரியாகவும், 2015-ம் ஆண்டின் சிறந்த திருநங்கை யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது தவிர 15-க்கும் மேற்பட்ட தமிழ் சினிமாக்களிலும் நடித்து வருகிறார்.

மதுரையில் ஒரு நிகழ்ச்சிக்காக நேற்று வருகை தந்த நமீதா, ‘தி இந்து’விடம் கூறிய தாவது:

திருநங்கையாக உணர்ந்த தருணங்களில் ஏகப்பட்ட அவமானங்களை சந்திக்க நேரிட்டது. அவற்றை எல்லாம் மறந்துவிட்டேன். ஏராளமான திருநங்கைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறேன். வயதான திருநங்கைகளுக்கென தனி காப்பகம் அமைத்து அவர்களை பாதுகாக்கவும், திருநங்கைகளுக்கென தனி பள்ளி, கல்லூரி தொடங்கவும் திட்டமிட்டுள்ளேன்.

திருநங்கைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 2 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் தனி நபர் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மசோதாவால் திருநங்கைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் தனி ஒதுக்கீடு வழங்கப்படும். இதனால், சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட பிரிவினராகக் கருதப்பட்ட திருநங் கைகளின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். திருநங்கைகளின் வாழ்வில் மகிழ்ச்சி நிலவும்.

ஏற்கெனவே தமிழக அரசு திருநங்கைகளுக்கு வீடு உட்பட பல்வேறு வசதிகளை செய்து கொடுத்து வருகிறது. கல்வி, வேலைவாய்ப்பில் தனி ஒதுக்கீடு கிடைக்கும்போது, அதனால் திருநங்கைகள் மீதான பாலியல் முத்திரை விலகும்.

தமிழகத்தில் கடை உள்ளிட்ட திறப்பு விழாக்களுக்கு முக்கிய பிரமுகர்களையும், நடிகைகளை யும் அழைக்கும் பழக்கம் மட்டுமே உள்ளது. இது தற்போது மாறி திருநங்கைகளையும் திறப்பு விழாக்களுக்கு அழைக்கின்றனர். இது வரவேற்கத்தக்கது என்றார் நமீதா.

SCROLL FOR NEXT