1996 ஜூன் 14:
கடந்த 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா முதல்வராக பதவி வகித்தபோது வருமானத்துக்கு பொருந்தாத வகையில் ரூ.66.65 கோடி சொத்து குவித்ததாக சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அப்போதைய ஜனதா கட்சித் தலைவராக இருந்த சுப்பிரமணியன் சுவாமி மனு தாக்கல் செய்தார்.
ஜூன் 21:
சுப்பிரமணியன் சுவாமி புகார் தொடர்பாக புலன் விசாரணை நடத்தும்படி ஐ.பி.எஸ். அதிகாரி லதிகா சரணுக்கு சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.
டிச.7:
இந்த வழக்கில் முதல்வர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டார்.
1997 ஜூன் 4:
ஜெயலலிதா மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அக்.1:
சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக ஜெயலலிதா தாக்கல் செய்த 3 மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
2000 ஆக.:
இதுவரை 250 அரசுத் தரப்பு சாட்சியங்களிடம் விசாரணை முடிக்கப்பட்டது.
2001 மே:
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஜெயலலிதா மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார்.
செப்.21:
டான்சி வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவால் முதல்வர் பதவியில் இருந்து ஜெயலலிதா விலகி ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார்.
2002 மார்ச் 2:
ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றார்.
2003 பிப்.28:
சொத்துக் குவிப்பு வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நவ.18:
சொத்துக் குவிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் பெங்களூருவுக்கு மாற்றியது.
2005 பிப்.19:
சொத்துக் குவிப்பு வழக்கில் பி.வி. ஆச்சார்யாவை அரசு தரப்பு வழக்கறிஞராக கர்நாடக அரசு நியமித்தது.
2011 நவ/அக்:
பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜராகி 1339 கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
2012 ஆக.12:
அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
2013 ஜன.:
ஆச்சார்யாவின் ராஜினாமாவை கர்நாடக அரசு ஏற்றுக் கொண்டு பணியில் இருந்து அவரை விடுவித்தது.
பிப்.2:
புதிய அரசு வழக்கறிஞராக பவானி சிங்கை கர்நாடக அரசு நியமித்தது.
ஆக.26:
பவானி சிங்கின் நியமனத்தை கர்நாடகம் திடீரென வாபஸ் பெற்றது.
2014 பிப்.28:
ஜெயலலிதா வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளி பொருட்களை நீதிமன்றத்தின் பார்வைக்கு கொண்டு வர வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் பவானி சிங் கோரியதை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் நிராகரித்தது. வழக்கை தாமதப்படுத்தும் நோக்கில் பவானி சிங் செயல்படுவதாக நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்தது.
மார்ச் 14, 15:
இறுதிவாதத்தின்போது உடல்நலக்குறைவு என்று கூறி பவானி சிங் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவரது ஒருநாள் ஊதியம் ரூ.60 ஆயிரத்தை அபராதமாக விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
மார்ச் 18:
சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பவானி சிங் மேல்முறையீடு செய்தார்.
மார்ச் 21:
பவானி சிங்கின் மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஆக.28:
வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 20 தேதி அறிவிக்கப்படும், அன்றைய தினம் முதல்வர் ஜெயலலிதா உள்பட 4 பேரும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
செப். 16:
போலீஸாரின் வேண்டுகோளை ஏற்று பாதுகாப்பு காரணங்களுக்காக தீர்ப்பு தேதி செப்.27-க்கு தள்ளிவைக்கப்பட்டது.
செப்.27:
சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஜெயலலிதா கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அக்.7:
ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அக்.9:
ஜாமீனில் விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார்.
அக்.17:
ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேரையும் ஜாமீனில் விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அக்.18:
பெங்களூர் சிறையில் இருந்து 21 நாள் சிறைவாசத்துக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட ஜெயலலிதா, சென்னை திரும்பினார்.
டிச.8:
சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யக் கோரி ஜெயலலிதா உள்ளிட்டோர் மேல்முறையீட்டு வழக்கு தொடர்பான ஆவணங் களை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
2015 பிப்.26:
அரசு சிறப்பு வழக்கறிஞராக பவானி சிங் நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மனு தாக்கல் செய்தார்.
மார்ச் 11:
மேல் முறையீட்டு வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது கர்நாடக உயர் நீதிமன்றம்.
ஏப்.27:
அரசு சிறப்பு வழக்கறிஞராக பவானி சிங் நியமிக்கப்பட்டது செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.
ஏப்.28:
அரசு சிறப்பு வழக்கறிஞராக பி.வி.ஆச்சார்யா நியமனம். ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யக் கோரி ஆச்சார்யாவின் எழுத்துபூர்வ வாதம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல்.
மே 8:
மேல்முறையீட்டு வழக்கில் மே 11-ம் தேதி தீர்ப்பு வெளியாகும் என அறிவிப்பு.
மே 11:
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு.