சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மருத்துவக் கல்வி நிறுவனத்தில் எம்.எஸ்சி., (மாலிகுலர் வைராலஜி) படிப்பும், காஞ்சிபுரம் காரப்பேட்டை அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் எம்.எஸ்சி., (மருத்துவ இயற்பியல்) படிப்பும், சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் எம்.ஃபில் (கிளினிக்கல் சோஷியல் ஒர்க்) படிப்பும் வழங்கப்படுகின்றன.
மாலிகுலர் வைராலஜி படிப்பில் சேர பி.எஸ்சி., நுண்ணுயிரியல் பட்டம் அல்லது நுண்ணுயிரியலை துணைப்பாடமாக எடுத்து பி.எஸ்சி., பட்டம் பெற்றிருக்க வேண்டும். மருத்துவ இயற்பியல் (மெடிக்கல் பிசிக்ஸ்) படிப்புக்கு பி.எஸ்சி., (இயற்பியல்) பட்டம் அல்லது இயற்பியலை துணைப் பாடமாக எடுத்து பி.எஸ்சி., (விலங்கியல்) பட்டம் பெற்றிருக்க வேண்டும். எம்.ஃபில் படிப்புக்கு எம்.ஏ. (சோஷியல் ஒர்க்) பட்டம் அவசியம். அத்துடன் மருத்துவ, உளவியல் மருத்துவ சமூகப் பணியில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்.
மேற்கண்ட படிப்புகளில் சேரு வதற்கான விண்ணப்பப் படிவங் களை தமிழக அரசு சுகாதாரத்துறை இணையதளத்தில் (www.tnhealth.org) பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ‘செயலாளர், தேர்வுக்குழு, சென்னை-10’ என்ற பெயரில் எடுக்கப்பட்ட ரூ.1,000 டிமாண்ட் டிராப்டை இணைத்து அனுப்ப வேண்டும். எஸ்சி, எஸ்டி மாணவர்கள் கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை. விண்ணப்பங்களை ஜூன் 10-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தத் தகவல்களை மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.