சென்னை விமான நிலையத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கத்தை கடத்தி வந்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் இருந்து சென்னை வரும் விமானத்தில் பெரிய அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். பேங்காக்கில் இருந்து வரும் விமானம் நள்ளிரவு 12.30 மணிக்கு சென்னை வந்தது. சுங்கத்துறை அதிகாரிகளுடன் இணைந்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பயணிகளை சோதனை செய்து வெளியே அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த சுராஜூதீன் (31), ஆரிப்தீன் (27) ஆகியோர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை சோதனை செய்தனர். அப்போது அவர்கள் கையில் வைத்திருந்த பையில் 2 கிலோ 100 கிராம் தங்கம் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விமான நிலையத்தின் வெளியே இருந்த தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியர்கள் 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.