முல்லைக்கு தேர் கொடுத்தது பாரி, மரத்துக்கு உயிர் கொடுத்தது மாரி; மதி உள்ளவன் மரம் வளர்ப்பான், மதி கெட்டவன் மரம் அழிப்பான்; நெகிழியை தவிர்ப்போம், நிலத்தடி நீரை பெருக்குவோம்; சுத்தமான காற்றை சுற்றுச்சூழலுக்குக் கொடுப் போம், சுகாதாரமான காற்றை நாம் சுவாசிப்போம்.
இவ்வாறு 55 சுற்றுச்சூழல் பாது காப்பு ஸ்லோகங்களை உருவாக்கி, மாநில அளவில் முதல் பரிசு பெற்று சாதனை படைத்துள்ளார் 8-ம் வகுப்பு மாணவர் நா.புகழேந்தி.
மத்திய அரசின் சுற்றுச்சூழல் கல்வி மையம் சார்பில், சர்வதேச உயிரினப் பன்மயத்துக்கான தினத்தையொட்டி, மாநில அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஸ்லோகம் மற்றும் கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டியில் மாநிலம் முழுவ தும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் 55 ஸ்லோகங்கள் எழுதிய மாணவர் புகழேந்திக்கு முதல் பரிசு கிடைத்தது. இதற்காக அவருக்கு ‘பர்யாவரண் மித்ரா’ விருது வழங்கப்பட்டது.
இதுகுறித்து மாணவர் புகழேந்தி, ‘தி இந்து’விடம் நேற்று கூறியது:
எனது தந்தை நாகராஜன் வர்ணம் பூசும் தொழிலாளி. மதுரை புறநக ரில், இளமனூர் லெட்சுமிகாந்தன் பாரதி நகரில் எங்கள் பள்ளி உள்ளது. சுற்றுச்சுவர் இன்றி, கருவேல மரங்கள் சூழ இருந்த பள்ளி, இப்போது பசுஞ்சோலையாக காட்சி தருகிறது.
பள்ளியில் சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரி யர் டி.யு. ராஜவடிவேல் மரம் வளர்ப்பிலும், சுற்றுச்சூழல் விழிப் புணர்வை ஏற்படுத்துவதிலும் மாணவ, மாணவிகளை ஈடுபடுத்தி வருகிறார். அவரது ஆலோசனைப்படி, பள்ளி வளாகம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறோம்.
பள்ளிக்கு தினமும் சீக்கிர மாகச் சென்று மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுவோம். பிறகே வகுப்புகளுக்குச் செல்வோம். தற்போது நாங்கள் நட்டுவைத்த மரங்கள் ஆரோக்கியமாக வளர்ந்து வருவது மகிழ்ச்சியை தரு கிறது.
இந்நிலையில், ஆசிரியர் ராஜ வடிவேல் ஸ்லோகங்கள் எழுதும் போட்டி குறித்து எங்களிடம் தெரிவித்தார்.
நானும் நண்பர்கள் அப்ரக், மகாலிங்கம், அரவிந்தன், மாரி பிரபு, கார்த்திகேயன், சிக்கந்தர் பாட்ஷா ஆகியோர் சேர்ந்து, ‘இடி இடிப்பது மழைக்காக, என் இதயம் துடிப்பது இயற்கைக்காக’, ‘மரங்களை அழிப்பது மனிதர்களை அழிப்பதுபோல’, ‘நீரின் ஆதாரம் மழை, மழையின் ஆதாரம் மரம்’, ‘கடவுள் கொடுத்தது வரம், அந்த வரமே தாவரம்’, ‘மரத்தை நேசிப் போம், காற்றை சுவாசிப்போம்’ என 55 புதிய ஸ்லோகங்களை உருவாக்கினோம்.
எங்களது ஸ்லோகங்களுக்கு மாநில அளவில் விருது கிடைத் திருப்பது மகிழ்ச்சி தருகிறது. இந்த விருது எங்களை மேலும் ஊக்குவிக்கும்.
இவ்வாறு புகழேந்தி கூறினார்.
இந்த ஸ்லோகங்களை உருவாக்க மாணவர்களை ஊக்குவித்த ஆசிரியர் ராஜவடிவேலுக்கும் ‘பர்யாவரண் மித்ரா’ விருது வழங்கப்பட்டது.