நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட நிலநடுக் கத்தின் காரணமாக சென்னையின் சில பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டன.
கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கத்திலிருந்து இன்னமும் மீளாத நேபாளத்தில் நேற்று மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 12.35 மணி முதல் 2.04 மணி வரை 7 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால், இந்தியாவின் பல பகுதிகளிலும் நிலநடுக்கத்தின் பின் அதிர்வுகள் உணரப்பட்டன. சென்னையில் மயிலாப்பூர், கோடம்பாக்கம், சாந்தோம், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால் அடுக்குமாடி கட்டிடங்களில் இருந்தவர்கள் அவசர அவசரமாக கட்டிடங்களை விட்டு வெளியேறினார்கள். குடியிருப்பு பகுதியில் இருந்தவர்கள் பீதியடைந்து தெருக்களுக்கு ஓடி வந்தனர். சில நொடிகள் மட்டுமே நில அதிர்வுகள் நீடித்தன. அதன் பிறகு இயல்பு நிலை திரும்பியது.
மயிலாப்பூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் மரிய வினோதினி கூறும்போது, “2 வாரங்களுக்கு முன்பு, நில அதிர்வுகள் ஏற்பட்டபோது லேசாக தலை சுற்றுவதுபோல இருந்தது. இந்த முறையும் அதேபோல தலை சுற்ற ஆரம்பித்தவுடன், நில அதிர்வுகள் என்று புரிந்து கொண்டு, அலுவலக கட்டிடத்துக்கு வெளியே சென்றுவிட்டோம். பக்கத்து கட்டிடங்களில் இருப்பவர்களும் வெளியே வந்திருந்தனர்” என்றார்.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறும்போது, “நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக சென்னையில் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்புகளின்படி 5 வகையாக நிலப் பரப்புகளை வகைப்படுத்தலாம். இதில் சென்னை மூன்றாவது வகையில்- அதாவது அதிக நிலநடுக்கங்கள் ஏற்படாத பகுதியில் உள்ளது. எனவே சென்னையில் பாதிப்புகள் ஏதும் இருக்காது” என்றனர்.