தமிழகம்

இன்று கூடுகிறது மாநகராட்சி மன்றம் - அம்மா திரையரங்க அறிவிப்பு வெளியாகுமா?

செய்திப்பிரிவு

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மன்றக் கூட்டம் இன்று காலை நடைபெறுகிறது. இதில் அம்மா திரையரங்கம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு மாநகராட்சியின் மாதாந்திரக் கூட்டம் இன்று முதல் முறையாக நடக்கிறது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தில் புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லாதது சென்னைவாசிகளுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது. இந்நிலையில் இன்று நடைபெ றவிருக்கும் கூட்டத்தில் புதிய திட்ட அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அம்மா திரையரங்கம்

2013-14-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சிறப்பு திட்டங் களுள் ஒன்று அம்மா திரையரங்கம். ஆனால் இதுவரை அதற்கான பணிகள் எதுவும் தொடங்கப் படவில்லை. தற்போது சென்னையில் 6 அம்மா திரையரங்கங்கள் அமைக்க இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்கான வடிவமைப்பாளர்களை நியமிக்க இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராயபுரம் மண்டலத்தில் 52-வது வார்டில் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில், திரு.வி.க.நகர் மண்டலத்தில் 73-வது வார்டில் பேசின் பிரிட்ஜ் அருகில், ஆலந்தூர் மண்டலத்தில் 155-வது வார்டில் ராமாபுரத்தில் எஸ்.ஆர்.எம் கல்லூரி அருகில், தேனாம்பேட்டை மண்ட லத்தில் 122-வது வார்டில் கோட்டூர்புரத்தில், கோடம்பாக்கம் மண்டலத்தில் 136வது வார்டில் தி.நகரில் இரண்டு திரையரங்குகள் அமைக்கப்படவுள்ளதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரி வித்தன. தி.நகரில் ஒரு திரைய ரங்கம், பனகல் பார்க்கில் 12 மாடி கட்டிடத்தில் அமையவுள்ளதாக கூறப்படுகிறது.

உரிம கட்டணம் உயர்வு

வணிக வளாக உரிம கட்டணத்தை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை உயர்த்த 2009-ம் ஆண்டு போடப்பட்ட தீர்மானத்தின்படி, உரிம கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்தவும், சென்னையில் 17 சாலைகளை விரிவாக்கம் செய்யவும், திரு.வி.க.நகர் மண்டலத்தில் 300-க்கும் மேற்பட்ட சாலைகள் போடவும், ரூ.9 கோடியே 36 லட்சம் செலவில் மத்திய தார் கலவைக்கு புதிய இயந்திரங்கள் வாங்கவும், பெருங்குடி மண்டலத்தில் மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கவும், ரூ.2 கோடியே 8 லட்சம் செலவில் கேப்டன் காட்டன் கால்வாய் சீரமைப்பு பணிகளை நீட்டிக்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப் படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT