தமிழகம்

சிறப்பு சட்டப் படிப்புகளுக்கு மே 8 முதல் விண்ணப்பம்: 4 புதிய படிப்புகள் அறிமுகம்

செய்திப்பிரிவு

ஐந்தாண்டு கால சிறப்பு சட்டப் படிப்புகளுக்கு (ஆனர்ஸ்) மே 8-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன. இந்த ஆண்டு 4 புதிய சட்டப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

இதுதொடர்பாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் பி.வணங்காமுடி நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இதுவரை பிஎல் என்று அழைக்கப்பட்டுவந்த இளங்கலை சட்டப் படிப்பும், எம்எல் என்று அழைக்கப்பட்டு வந்த முதுகலை சட்டப் படிப்பும் பார் கவுன்சில் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) உத்தரவின்படி, எல்எல்பி என்றும் எல்எல்எம் என்றும் பெயர் மாற்றம் செய்யப்படும். இப்புதிய முறை இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும். ஏற்கெனவே படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பழைய பெயரிலேயே சட்டப் பட்டம் வழங்கப்படும்.

சட்டப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் சீர்மிகு சட்டப் பள்ளியில் (ஸ்கூல் ஆஃப் எக்ஸ்சலன்ஸ்) ஏற்கெனவே பிஏ.பிஎல் (ஆனர்ஸ்), பிகாம்.பிஎல் (ஆனர்ஸ்) என்ற 5 ஆண்டு கால சிறப்பு சட்டப் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு புதிதாக பிபிஏ. எல்எல்பி, பிசிஏ. எல்எல்பி மற்றும் எல்எல்எம் படிப்புகள் புதிதாக அறிமுகப்படுத்தப்படுகின்றன.

மேலும், தொலைதூரக் கல்வியில் எம்சிஎல் (கார்ப்பரேட் லா) என்ற புதிய படிப்பு கொண்டுவரப்படுகிறது. புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம் சிறப்பு சட்டப் படிப்புகளில் உள்ள இடங்களின் எண்ணிக்கை 320-லிருந்து 660 ஆக உயரும் (கூடுதலாக 340 இடங்கள்). தொலைதூரகல்வி எம்சிஎல் கார்ப்பரேட் லா படிப்பில் சட்ட பட்டதாரிகள் சேரலாம்.

ஐந்தாண்டு கால ஆனர்ஸ் சட்டப் படிப்புகளுக்கு மே 8-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 5-ம் தேதி ஆகும். தரவரிசைப் பட்டியல் ஜூன் 12-ல் வெளியிடப்படும்.

எல்எல்பி (ஆனர்ஸ்) படிப்பு, எல்எல்எம், எம்சிஎல் (தொலைதூரக்கல்வி) படிப்புகள் மற்றும் முதுகலை பட்டயப் படிப்பு, சான்றிதழ் படிப்பு ஆகியவற்றுக்கு மே 25-ம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகிக்கப்படும். அரசு சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் 5 ஆண்டு கால பிஏ.எல்எல்பி படிப்புக்கு மே 14-ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 12-ம் தேதி ஆகும். தரவரிசைப் பட்டியல் ஜூன் 26-ம் தேதி வெளியாகும். இதேபோல், 3 ஆண்டு கால எல்எல்பி படிப்புக்கு மே 25-ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 17-ம் தேதி. தரவரிசைப் பட்டியல் ஜூலை 31-ம் தேதி வெளியிடப்படும்.

இவ்வாறு துணைவேந்தர் வணங்காமுடி கூறினார்.

SCROLL FOR NEXT