கிருஷ்ணகிரி அருகே வங்கியில் கொள்ளை போன நகைகளுக்கு வட்டி வசூலித்ததாகக் கூறி வாடிக்கையாளர்கள் வங்கி மீது கல்வீசி சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி அருகே உள்ள ராமாபுரம் கிராமத்தில் பேங்க் ஆஃப் பரோடா வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கடந்த ஜனவரி மாதம் 23-ம் தேதி நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தை வெட்டி எடுத்து ரூ.12 கோடி மதிப்புள்ள 6,038 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் வட மாநில கொள்ளையர்கள் 3 பேரை மாவட்ட எஸ்.பி. கண்ணம்மாள் தலைமையிலான தனிப்படையினர் கைது செய்துள்ளனர்.
இதனிடையே, வங்கியில் நகைகளை அடகு வைத்திருந்த வாடிக்கையாளர்கள் நகைகளைக் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நகை அல்லது இழப்பீடு தொகை பெற்றுத் தரப்படும் என வங்கி அதிகாரிகள் வாடிக்கையாளர் களிடம் உறுதியளித்தனர்.
இந்நிலையில், சில தினங் களுக்கு முன் கொள்ளை போன நகைகளுக்கு வட்டி கட்ட வலி யுறுத்தி சில வாடிக்கையாளர் களுக்கு வங்கி நிர்வாகம் எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், சிலரது வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து வட்டி பிடித்தம் செய்தும், சிலரிடம் பணத்தையும் வங்கி அதிகாரிகள் வசூலித்துள்ளனர்.
இதுகுறித்து வாடிக்கையாளர் கள் வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் உரிய முறையில் பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் நேற்று காலை 11 மணியளவில் வங்கி முன்பு திரண்டனர். “கொள்ளை போன நகையை முழுமையாக மீட்டுத் தர வேண்டும். பிடித்தம் செய்யப்பட்ட வட்டியை உடனடியாக வழங்க வேண்டும்” எனக் கூறி, வங்கி மீது கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
பின்னர், கிருஷ்ணகிரி - வேப்பனப்பள்ளி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த டிஎஸ்பி சந்தான பாண்டியன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், பாஸ்கர், தங்கவேல் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டிஎஸ்பி-க்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்துக்குப் பின் சாலை மறியலை வாடிக்கையாளர்கள் கைவிட்டனர். இதையடுத்து வங்கி மேலாளர்கள் உதய் பாஸ்கர், கோபால் மற்றும் போலீஸார் வாடிக்கையாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது வாடிக்கையாளர்கள் கூறியதாவது:
கொள்ளை போன நகைகளின் தொகைக்கு வட்டி வாங்கக் கூடாது. எங்களது அனுமதியில்லாமல் சேமிப்பு கணக்கில் பிடித்தம் செய்த வட்டி தொகையை திரும்பி அளிக்க வேண்டும். கொள்ளை போன நகைகளின் தற்போது நிலவரம் குறித்து முழுமையாக விளக்க வேண்டும். நகைக்கு உரிய முழுமையான தொகை வழங்க வேண்டும் என்றனர்.
இதற்கு வங்கி அதிகாரிகள் பதிலளித்தபோது, “ஜனவரி 24-ம் தேதி முதல் நகைகளுக்கு வட்டி முழுமையாக கிடையாது. நகைக்கு உரிய இழப்பீடு சந்தை நிலவரப்படி கணக்கிட்டு தொகை வழங்கப்படும். கொள்ளை சம்பவத்துக்குப் பிறகு பிடித்தம் செய்யப்பட்ட வட்டி தொகை திரும்ப தரப்படும்” என்றனர். இதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வங்கிக் கொள்ளையில் மேலும் ஒருவர் கைது
வங்கிக் கொள்ளை வழக்கில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முகமது ஷாநவாஸ் (49), அப்ரர் (27) ஆகியோரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஷாநவாஸ் தலைமையில் 9 பேர் கொண்ட கும்பல் லாரியில் கிருஷ்ணகிரிக்கு வந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்நிலையில் வங்கி கொள்ளையில் தொடர்புடைய கம்ராயலம் கிராமத்தை சேர்ந்த ஷேக் அலிகான் (53) என்பவரை கடந்த 18-ம் தேதி போலீஸார் கைது செய்தனர். அவரை கிருஷ்ணகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் நேற்று ஆஜர்படுத்தினர். ஷேக் அலிகானை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு போலீஸார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
“கொள்ளையர்களிடம் இருந்து இதுவரை அரை கிலோ தங்கம் உட்பட ரூ. 45 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளதாகவும், விரைவில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் 6 பேரை கைது செய்து நகைகளை பறிமுதல் செய்யவுள்ளதாகவும்” டிஎஸ்பி சந்தான பாண்டியன் தெரிவித்தார்.