கூடலூர் அருகே ஓவேலி பகுதியில் ஆதார் அட்டைகள், முக்கிய தபால் ஆவணங்கள் உள்ளிட்டவை குப்பைத் தொட்டியில் கிடந்தது தொடர்பாக, ஸ்ரீமதுரை தபால் நிலைய ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம் ஓவேலி பகுதி குப்பைத் தொட்டியில் 11 ஆதார் அட்டைகள் உட்பட 152 கடிதங்கள் கிடந்தன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்தில் வருவாய்த் துறையினர் ஆய்வு மேற்கொண்டு, ஆவணங்களை கைப்பற்றி விசாரித்தனர்.
இந்நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, அம்பலமூலாவில் உள்ள தபால் நிலையத்தை மதுரை மக்கள் முற்றுகையிட்டு, நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், தபால் நிலையத்தை திறக்க முடியாமல் ஊழியர்கள் காத்திருந்தனர். பாதுகாப்புப் பணியில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தபால் துறை ஆய்வாளர் ரோகிணி, மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இதன்பின்னர் தபால் ஊழியர்களிடம் விசாரணை நடந்தது. இதுதொடர்பாக மதுரை கிளை தபால் நிலைய ஊழியர் அஜ்மல் பர்வீனை பணியிடை நீக்கம் செய்து, அதிகாரிகள் நேற்று உத்தரவிட்டனர்.