கொள்ளை சம்பவத்தின்போது, ‘நகை, பணம் வேண்டுமானால் எடுத்துக் கொள்; எங்களை ஒன்றும் செய்து விடாதே’ என்று கெஞ்சியதாக வயதான தம்பதி மிரட்சியுடன் தெரிவித்தனர்.
சென்னை அமைந்தகரை கஜபதி தெருவில் வசிப்பவர் பட்டாபிராம்(71). ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. இவரது மனைவி நளினா(65). இவர்களின் ஒரே மகள் திருமணமாகி அண்ணா நகரில் வசிக்கிறார். இதனால் பட்டாபிராம்-நளினா தம்பதி ஒரு வீட்டில் தனியாக வசிக்கின்றனர். கடந்த 26-ம் தேதி இரவில் இவர்கள் இருவரையும் கட்டிப்போட்டு கொள்ளையடிக்கும் முயற்சி நடந்தது. ஜெனிபர்(28), மோனிகா(23) என்ற சகோதரிகள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடந்த சம்பவங்கள் குறித்து பட்டாபி ராம், நளினா தம்பதி கூறியதாவது:
இரவு 8.30 மணி இருக்கும் கிரில் கதவை பூட்டு போடாமல் மூடி வைத்துவிட்டு, மரக் கதவை திறந்து வைத்து நாங்கள் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தோம். அப் போது திடீரென பர்தா அணிந்த 2 பெண்கள் பத்திரிகை கொடுப்பதற்கு வந்திருப்பதாக கூறினர். கிரில் கேட் வழியாக ஒரு பத்திரிகையையும் நீட்டினர். அதை நாங்கள் வாங்கி பார்த்துவிட்டு, நீங்கள் யாரென்றே எங்களுக்கு தெரியவில்லை என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, கிரில் கதவை திறந்து உள்ளே நுழைந்துவிட்டனர்.
உள்ளே நுழைந்ததும் அவர்கள் வைத்திருந்த கைப்பையை திறந்து கத்தியை எடுத்து ‘சத்தம் போட்டால் குத்தி விடுவேன்’ என்று மிரட்டினர். நாங்கள் இருவரும் கத்தியை பிடுங்க முயற்சித்தபோது எங்கள் இருவரின் கை விரல்களிலும் கத்தியால் வெட்டினார்கள். பின்னர் கதவை அடைத்து, செல்போனை பிடுங்கி ஓரத்தில் வைத்துவிட்டனர்.
என்னை (நளினா) படுக்கை யறைக்கு இழுத்துச் சென்று கை, கால்களை கட்டி வாயில் பிளாஸ் திரி போட்டு ஒருவர் ஒட்டினார். எனது கை, கால்களை கட்டும் போது, ‘உனக்கு நகை, பணம் வேண்டும் என்றால் எடுத்துக்கோ? பீரோ சாவியும் கொடுக்கிறேன். எங்களை மட்டும் ஒன்றும் செய்து விடாதே’ என்று கெஞ்சினேன். ஆனால் அவர் என்னை கட்டிப்போடு வதில்தான் குறியாக இருந்தார்.
என்னை (பட்டாபிராம்) சேரில் உட்கார வைத்து சேருடன் சேர்த்து கட்டினார் மற்றொருவர். ஆனால் நான் கட்ட விடாமல் கை, கால்களை அசைத்துக் கொண்டே இருந்தேன். இதனால் ஆத்திரம் அடைந்து என்னை சரமாரியாக தாக்கினார். உடனே அபயக்குரல் எழுப்ப ஆரம்பித்தேன்.
நான் அபயக்குரல் எழுப்புவதை யும், என்னை ஒருவர் தாக்கி, கயிற்றால் கட்டுவதையும் எங்கள் வீட்டின் அருகே உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள சில இளைஞர்கள் பார்த்துவிட்டனர். உடனே அவர்கள் திரண்டு வந்து எங்கள் வீட்டுக்கு வந்து கதவை தட்ட ஆரம்பித்தனர். கதவு திறக்கப்படாததால் கம்பு, கட்டை களை எடுத்து கதவை அடித்து உடைக்க ஆரம்பித்துவிட்டனர். வீட்டுக்குள் பயங்கர சத்தம் கேட்டது. இதனால் கொள்ளையடிக்க வந்த இரு பெண்களுக்கும் அடுத்து என்ன செய்வது என்று தெரிய வில்லை. அவர்கள் பயப்பட ஆரம்பித்துவிட்டனர்.
அதன் பின்னர்தான் நாம் காப்பாற்றப்பட்டு விடுவோம் என்று எங்களுக்கு கொஞ்சம் நம்பிக்கை ஏற்பட்டது. கதவை மெல்ல திறந்து ஒருவர் தப்பிக்க முயன்றார். ஆனால் கூடியிருந்த பொதுமக்கள் இருவரையும் பிடித்து அவர்களின் முகமூடியை கழற்றினர். அதன் பின்னர்தான் இருவரும் இதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த வர்கள் என்பது தெரியவந்தது. டி.பி.சத்திரம் போலீஸார் வந்து இருவரையும் அழைத்து சென்றனர்.
நாங்கள் கடந்த 50 ஆண்டுகளாக இந்த பகுதியில்தான் வசிக்கிறோம். 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வீட்டில் இருக்கிறோம். ஜெனிபரும், மோனிகாவும் 10 மாதங்கள் இதே குடியிருப்பின் மாடியில் வசித்தனர். அப்போது நேரடியாக பார்த்தால் எங்களை பார்த்து லேசாக சிரிப்பார்கள். அவ்வளவுதான் எங்களுக்குள்ள பழக்கம். கொள்ளை சம்பவத்தை இப் போது நினைத்தாலும் நெஞ்சம் பதறுகிறது. இப்படி ஒரு சம்பவம் யாருக்கும் நடக்கக்கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஜெனிபருக்கு திருமணமாகி 3 ஆண்டுகளில் அவரது கணவர் இறந்துவிட்டார். அவர் ரூ.10 லட்சம் வரை கடன் வைத்துவிட்டு சென்றுவிட்டார். கடன் கொடுத்தவர் கள் நெருக்கடி கொடுத்ததாலும், தங்கை மோனிகாவுக்கு திரு மணம் செய்துவைக்க பணம் தேவைப்படுவதாலும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக ஜெனிபர் வாக்குமூலத்தில் தெரிவித்திருப் பதாக டி.பி.சத்திரம் போலீஸார் தெரிவித்தனர்.