புதுக்கோட்டை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கக் கோரி பிரதமர், தமிழக முதல்வருக்கு 20 ஆயிரம் அஞ்சல் அட்டைகள் அனுப்பப்பட உள்ளன.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக 5 இடங்களில் மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் ஆய்வு நடத்தினர். இந்நிலையில், புதுக்கோட்டையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கக் கோரி பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையொட்டி, பிரதமர், தமிழக முதல்வர், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஆகியோருக்கு 20 ஆயிரம் அஞ்சல் அட்டைகள் அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, புதுக்கோட்டை புதிய, பழைய பேருந்து நிலையங்கள், நீதிமன்ற வளாகம், அண்ணா சிலை, பழனியப்பா முக்கம், பிருந்தாவனம் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, மக்களிடமிருந்து அஞ்சல் அட்டைகள் நேற்று சேகரிக்கப்பட்டன.
இந்தப் பணியில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 33 அமைப்பினர் பங்கேற்றனர். இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ் கூறும்போது, “புதுகையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கக் கோரி 20,000 அஞ்சல் அட்டைகள் அனுப்பத் திட்டமிட்டுள்ளோம். முதல்நாளிலேயே 10,000 அட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, மாணவர்கள் மூலம் அஞ்சல் அட்டைகளைத் திரட்டி, பிரதமர், முதல்வருக்கு அனுப்பிவைக்க உள்ளோம்.
மேலும், நாள்தோறும் மின்னஞ்சல் மூலமும் பிரதமருக்கு கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்படுகிறது. கோரிக்கை நிறைவேறும்வரை தொடர்ந்து போராடுவோம்” என்றார்.