சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் குற்றச்செயல்களை தூண்டும் வகையில் பதிவிட்டதற்காக 44 சமூகவலைதள கணக்குகள் முடக்கப்பட்டன. மேலும், 18 கணக்குகளை வைத்திருப்போர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டன.
சமூகவலைதளங்களில் குற்றச்செயல்களை தூண்டும் வகையில் பதிவுகள் மற்றும் சட்டவிரோத இணைய நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை போலீஸார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. டிஜிட்டல் விஜில் மூலம் சமூக வலைதள குற்றங்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சிவகங்கையில் அக். 18-ம் தேதி ரவுடி மதன் என்ற சுள்ளான் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து கடந்த 5 நாட்களாக இன்ஸ்டாகிராம், முகநூல் பக்கம் போன்ற சமூகவலைதளங்களில் குற்றச்சம்பவங்கள், வன்முறையை தூண்டும் வகையிலான கருத்துக்கள் அதிகளவில் பதிவிடப்பட்டு வந்தன.
அந்த சமூக வலைதளக் கணக்குகளை போலீஸார் முடக்கியுள்ளனர். கடந்த 5 நாட்களில் 44 சமூக வலைதளக் கணக்குகளை முடக்கியுள்ளனர். மேலும் 18 சமூக வலைதளக் கணக்குகளை வைத்திருப்போர் மீது வழக்குப் பதியப்பட்டன சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளை பதிவிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.