சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு 44 காவல்துறை அதிகாரிகள், பணியாளர்களுக்கு குடியரசு தினப் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.
இதுதொடர்பாக நேற்று அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மெச்சத்தக்க நுண்ணறிவு மற்றும் மெச்சத்தக்க சிறப்பு செயலாக்கப் பிரிவில் மிகச் சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில்ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் காவல்துறை அதிகாரிகள், பணியாளர்களுக்கு குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வரின் மெச்சத்தக்க நுண்ணறிவு மற்றும் மெச்சத்தக்க சிறப்பு செயலாக்க பணி பதக்கங்கள் ஆண்டுதோறும் குடியரசு தின விழாவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நடப்பாண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு, காவல் துறையில் மெச்சத்தக்க நுண்ணறிவு மற்றும் மெச்சத்தக்க சிறப்பு செயலாக்கப் பிரிவில் பணியாற்றிய 43 காவல்துறை அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் நுண்ணறிவு பிரிவு 1 தனிப்பிரிவு உதவியாளர் பிரிவு ஆகியோருக்கு தமிழக முதல்வரின் மெச்சத்தக்க நுண்ணறிவு பதக்கம் மற்றும் மெச்சத்தக்க சிறப்பு செயலாக்க பதக்கம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா 10 கிராம் எடையுடன் கூடிய தங்க பதக்கமும், ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். இந்த விருதுகள் முதல்வரால் சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.