தமிழகம்

தமிழகத்தில் நீர்நிலைகளை கோடையில் தூர்வார வேண்டும்: விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் இந்த கோடை காலத்திலேயே தூர்வார அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக் கிழமை நடந்தது. மாநிலத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழகத்தில் உள்ள அணைகள், ஏரி, கண்மாய், வரத்து வாய்க்கால்கள் அனைத்தும் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் அதன் முழுப் பயன்பாட்டை இழந்து நிற்கிறது. இதனால், கூடுதல் மழை பெய்யும் காலங்களிலும் நீரைத் தேக்கிவைக்க முடியாத அவல நிலை தொடர்கிறது. இந்தப் பிரச்சினையில் தமிழக அரசு தீவிரமாக செயல்பட வேண்டும். இந்த கோடை காலத்தை பயன்படுத்தி தமிழ்நாடு முழுவதும் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள இதுவே சரியான தருணம்.

குறிப்பாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவைப் பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடும் முன்பாக வரத்து வாய்க்கால்களில் அவசர உணர்வுடன் தூர்வாரப்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் இடையூறாக இருக்குமானால் தேர்தல் ஆணையத்தில் சிறப்பு அனுமதி பெற்று தூர்வாரும் பணியை அரசு மேற்கொள்ள முன்வர வேண்டும்.

முல்லைப் பெரியாறு தீர்ப்பை செயல்படுத்த வேண்டுகோள்

முல்லைப் பெரியாறு பிரச்சினை பலகட்ட போராட்டங்கள், பதற்றங்கள், மீண்டும் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு என பல்லாண்டு காலமாக இழுத்தடிக்கப்பட்டு வந்தது. இப்போது இந்த தீர்ப்பால் வரவேற்கக்கூடிய ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.

கேரளம் - தமிழ்நாடு மக்களின் நலனையும் உறவையும் கவனத்தில் கொண்டு இரு மாநில அரசுகளும் மத்திய அரசும் இத்தீர்ப்பைச் செயல்படுத்த முன்வர வேண்டும். தென் தமிழகத்தின் நலனுக்கு உகந்த இந்த தீர்ப்பை செயல்வடிவம் பெறச் செய்வதில் அனைவரும் ஒருமித்து செயல்பட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT