தமிழகம்

தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் பலி: உறவினர்கள் மீண்டும் மறியல் - போலீஸ் தடியடி - மாஜிஸ்திரேட் விசாரணை தொடங்கியது

செய்திப்பிரிவு

தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் பலியான சம்பவத்தை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணையும் தொடங்கியுள்ளது.

சென்னை கே.கே.நகர் 80 அடி சாலையில் நேற்று முன்தினம் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரை போக்குவரத்து போலீஸார் நிறுத்தச்சொல்லியும், அவர்கள் நிறுத்தாமல் சென்றதால் ஒரு போலீஸ்காரர் தனது லத்தியால் மோட்டார் சைக்கிள் ஓட்டியவரை தாக்கினார். இதில் நிலைதடுமாறி சாலை தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் செல்வம்(18) என்ற இளைஞர் இறந்தார். அவரது நண்பர்கள் விக்னேஷ், ராஜா ஆகியோர் லேசான காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து செல்வத்தின் உறவினர்களும், பொதுமக்களும் சேர்ந்து போக்குவரத்து போலீஸாரை தாக்கினார்கள். போலீஸ் வாகனங்களும் உடைக்கப்பட்டன.

மாஜிஸ்திரேட் விசாரணை

இந்த சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து சைதாப்பேட்டை 23-வது நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஜெயஸ்ரீ நேற்று காலையில் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். வாகன சோதனை நடத்தி தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ள போக்குவரத்து காவல் ஆய்வாளர் சற்குணம், ஏட்டு சிவானந்தம் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினார். மோட்டார் சைக்கிளில் செல்வத்துடன் சென்ற விக்னேஷ், ராஜா மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடமும் விசாரணை நடத்தி, சாட்சிகளாக சேர்த்துக்கொண்டார்.

மறியல் - போலீஸ் தடியடி

இந்நிலையில் விபத்து நடந்த இடத்தின் அருகில் செல்வத்தின் உறவினர்களும், பொதுமக்களும் நேற்றும் சாலை மறியல் செய்தனர். “விபத்தை ஏற்படுத்திய போலீஸ்காரர்கள் இங்கே நேரில் வந்து விளக்கம் கொடுத்து, மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று அவர்கள் கோரிக்கைவிடுத்தனர். மறியலால் வடபழனி, கே.கே.நகர், ஆற்காடு சாலை, 80 அடி சாலைகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

போலீஸார் அவர்களை கலைந்து போகச்சொல்லி பலமுறை கூறியும் மறியலை கைவிடவில்லை. அதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. இதில் பலர் காயம் அடைந்தனர். மறியலை முன்னின்று நடத்திய ஒருவரை குறிவைத்து போலீஸார் தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

போலீஸார் மீது குற்றப்பிரிவில் வழக்கு

விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் இந்திய தண்டனைச் சட்டம் 304(ஏ) பிரிவின் கீழ் விபத்து வழக்கு பதிவு செய்யப்படும். ஆனால் செல்வம் இறந்த வழக்கில் 176(1) என்ற குற்றப்பிரிவின் கீழ் காவல் ஆய்வாளர் சற்குணம், ஏட்டு சிவானந்தம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது போலீஸ் காவலில் இருக்கும் நபர் ஒருவர் இறந்தால், அந்த போலீஸார் மீது போடப்படும் பிரிவாகும்.

SCROLL FOR NEXT