தமிழகம்

வடபழனியில் மருத்துவமனை ஊழியர் கொலை: பட்டப் பகலில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு

செய்திப்பிரிவு

வடபழனியில் மருத்துவமனை ஊழி யர் சரமாரியாக குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்குன்றம் மூகாம்பிகை நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார் (31). இவரது மனைவி சண்முகவள்ளி (27). வடபழனி 100 அடி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சண்முகவள்ளி துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார். சில தினங்களுக்கு முன்பு வேலையில் இருந்து நின்றுள்ளார்.

இதே மருத்துவமனையில் சூப்பர் வைசராக பணியாற்றி வந்த வந்தவாசியை சேர்ந்த பிரகாஷ் (25) என்பவருக்கும், சண்முகவள்ளிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனை அறிந்த சிவக்குமார் மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் இருவருக்கும் பழக்கம் தொடர்ந்துள்ளது. இந்நிலையில் சிவக்குமார் மருத்துவமனைக்கு நேற்று காலை சென்றார். மருத்துவமனைக்கு வெளியே இருந்த பிரகாஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

ஆத்திரம் அடைந்த சிவக்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரகாஷை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடினார். வயிறு, மார்பு பகுதியில் பலத்த காயம் அடைந்த பிரகாஷ் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதனைப் பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் பிரகாஷை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே பிரகாஷ் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீஸார் பிரகாஷின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய சிவக்குமாரை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT