தமிழகம்

பூங்கா நகராட்சியாகிறது திருவேற்காடு

செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டம், திருவேற் காடு நகராட்சிப் பகுதிகளில் நகராட்சி நிர்வாகம் சார்பில் 7 இடங்களில் நடைபெற்று வரும் பூங்கா அமைக்கும் பணி, நிறைவடையும் நிலையில் உள்ளது.

சென்னைக்கு மிக அருகே அமைந்துள்ளது திருவேற்காடு நகராட்சி. இங்கு, பிரசித்திப் பெற்ற தேவி கருமாரியம்மன் கோயில் உள்ளது.

தற்போது, திருவேற்காடு நகராட்சியின் மக்கள்தொகை 80 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

திருவேற்காடு நகராட்சிப் பகுதியில் மக்கள் பொழுது போக்குவதற்காக 2 பூங்காக்கள் மட்டுமே இருந்தன. இதையடுத்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்காக நகராட்சிப் பகுதிகளில் ரூ. 5.47 கோடியில் 13 பூங்காக்களை அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

முதல்கட்டமாக திருவேற்காடு நகராட்சிப் பகுதிகளான ஐசிஎல் ஹோம் டவுன், கிரீன் பார்க், எச்எம்பி நகர், கேந்திர விகார், மகாலட்சுமி நகர், பல்லவன் நகர், கூட்டுறவு நகர் ஆகிய 7 இடங்களில் பூங்கா அமைக்கும் பணி கடந்த 3 மாதங்களுக்கு முன் தொடங்கியது.

சிறுவர் விளையாட்டுத் திடல், பூத்துக் குலுங்கும் செடிகள், நடைப்பயிற்சி பாதை, பூங்கா சுற்றுச்சுவரில் ஓவியங்கள் உள்ளிட்ட அம்சங்களுடன் இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஐசிஎல் ஹோம் டவுன், கிரீன்பார்க், பல்லவன் நகர் ஆகிய பகுதிகளில் 85 சதவீதம் பணிகள் முடிந்துவிட்டன. மற்ற பூங்காக்களில் 70 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. எனவே, விரைவில் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து, ஜூன் இறுதிக்குள் 7 பூங்காக்களும் மக்கள் பயன் பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று நகராட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதனால், திருவேற்காடு நகராட்சி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT