தமிழகம்

இன்று உலக பல்லுறுப்பு நோய் தினம்: உலகம் முழுவதும் 50 லட்சம் பேர் பாதிப்பு

செய்திப்பிரிவு

உலகம் முழுவதும் பல்லுறுப்பு நோயால் 50 லட்சம் பேர் பாதிக்கப்படிருப்பதாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் ஆர்.விமலா தெரிவித்தார்.

உலக செஞ்சரும பல்லுறுப்பு தினம் (World Lupus Day) ஆண்டு தோறும் மே 10-ம் தேதி அனுசரிக் கப்படுகிறது. இதையொட்டி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை - சென்னை மருத்துவக் கல்லூரி மூட்டு, தசை, இணைப்புத்திசு துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. மருத்துவமனை டீன் விமலா தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் துறைத் தலைவர் எஸ்.ராஜேஸ்வரி, முதுநிலை உதவிப் பேராசிரியர் டி.என்.தமிழ் செல்வன், இணைப் பேராசிரியர் ஜெ.யுப்ரேசியலதா, ஆர்எம்ஓ இளங்கோ, மருத்துவ துணை கண்காணிப்பாளர் ரகுநந்தன் மற்றும் பல்லுறுப்பு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் பங்கேற்றனர்.

டாக்டர் எஸ்.ராஜேஸ்வரி பேசியதாவது:

பல்லுறுப்பு நோய், தோல் மட்டுமில்லாமல் சிறுநீரகம், மூளை, இதயம், நுரையீரல், கண்கள் போன்ற உள்ளுறுப்புகளையும் எலும்புகளையும் தாக்குகிறது. தேவையில்லாத சில மருந்துகளை உட்கொள்ளுதல், கிருமி தொற்று, உணவுப் பழக்கம் போன்ற காரணங்களாலும் மரபு ரீதியாகவும் இந்த நோய் ஏற்படுகிறது. ஆண்களைவிட பெண்களே இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆரம்பத்திலேயே நோயை கண்டுபிடித்து சிகிச்சை பெற்றால், அதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.

தீராத காய்ச்சல், அதிகமாக முடி உதிர்தல், வாய்ப் புண்கள், சோர்வு நிலை, ரத்த சோகை, தோலில் புதிய சிவப்பு நிற தடிப்புகள் போன்றவை நோயின் அறிகுறிகளாகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

டீன் விமலா பேசும்போது, ‘‘இந்த நோயால் உலகம் முழுவதும் 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோயாளிகளுக்கு விலை உயர்ந்த ஊசி மருந்துகள் தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது. நோயாளிகள் டாக்டர்களின் ஆலோசனைப்படி நடந்துகொண்டால் நோயை கட்டுப்படுத்தலாம்’’ என்றார்.

SCROLL FOR NEXT