தஞ்சை பெரிய கோயில் நந்திக்கு 100 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
மாமன்னன் ராஜ ராஜ சோழனால் கி.பி. 1010-ல் கட்டி முடிக்கப்பட்ட தஞ்சை பெரிய கோயிலில் சோழர் ஆட்சிக்குப் பின்னர், தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களால் 16-ம் நூற்றாண்டில் 13 அடி உயரம் கொண்ட மிகப் பெரிய நந்தி அமைக்கப்பட்டு, இந்த நந்திக்கு அவ்வப்போது சந்தனக் காப்பு அலங்காரம் செய்தும் வந்துள்ளனர். காலப்போக்கில் சந்தனக் காப்பு அலங்காரம் செய்வது நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நந்திக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்ய முடிவு செய்யப்பட்டது. சுமார் 250 கிலோ எடை கொண்ட சந்தனக் கட்டைகள் அரைக்கப்பட்டு நேற்று முன்தினம் இரவு பெரிய கோயில் நந்திக்கு சாத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நேற்று காலை நந்திக்கு மகா தீபாராதனை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சந்தனக் காப்பு அலங்காரத்தில் இருந்த நந்தியம் பெருமானை வழி பட்டனர்.