காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூரை அடுத்த கடலூர் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக இரு பிரிவினிடையே நேற்று முன்தினம் இரவு மோதல் ஏற்பட்டது. தகவலறிந்து தடுக்கச் சென்ற போலீஸார் மீது கற்கள் வீசப்பட்டதால், லேசான தடியடி நடத்தப்பட்டது. மோதல் சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில், கடந்த மாதம் ஆண்டு விழா நடைபெற்றபோது சினிமா பாடல் ஒளிபரப்புவது தொடர்பாக இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக கூவத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அந்த இரு பிரிவினரிடையே நேற்று முன்தினம் இரவு மீண்டும் மோதல் ஏற்பட்டது. தகவலறிந்த கூவத்தூர் போலீஸார் கிராமத்துக்கு விரைந்து சென்று சமாதானம் செய்ய முயன்றனர். அப்போது, போலீஸார் மீது கற்கள் வீசப்பட்டன. இதில், போலீஸார் 3 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, கூட்டத்தைக் கலைக்க மாமல்லபுரம் டிஎஸ்பி மோகன் உத்தரவின்பேரில் லேசான தடியடி நடத்தப்பட்டது.
பின்னர், மோதல் சம்பவம் தொடர்பாக ஜெகன் (23), மன்னாதன் (40),மேகநாதன் (31) ஆகிய 3 பேரை கூவத்தூர் போலீஸார் கைது செய்தனர். பதற்றம் காரணமாக அந்தக் கிராமத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.