அதிகாரிகளை பழிவாங்கும் நோக்கத்தில் தற்கொலை முயற்சி செய்யும் அரசு ஊழியர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து, அச்சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஆ.காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: உயர் அதிகாரிகள் தனக்கு கீழ் உள்ள அலுவலர்களின் குறைகளை சுட்டிக் காட்டினாலோ, நடவடிக்கை எடுத்தாலோ, அதிகாரிகளை மிரட்டும் வகையில் தற்கொலை முயற்சியில் சிலர் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.
இதே நிலை நீடித்தால், எந்த அலுவலகத்திலும் பணி நடைபெறாது. இதனால் பொது மக்கள்தான் பாதிக்கப்படுவர்.
அரசு நிர்வாகத்தை முடக்க சிலர், திட்டமிட்டு இதுபோன்ற செயல்களை ஊக்குவித்து வருகின்றனர். தற்கொலை முயற்சி செய்யும் ஊழியர்களின் விவரங்களை நுண்ணறிவு பிரிவு போலீஸார், உளவுப் பிரிவு போலீஸார் விசாரித்தால் உண்மை நிலவரம் தெரியவரும்.
அரசையும், அதிகாரிகளையும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு மிரட்டும் அலுவலர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், துறைரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.