தமிழகம்

தாம்பரம், வேளச்சேரி ரயில் நிலையத்துக்கு சிறிய பேருந்துகளை இயக்க பொதுமக்கள் கோரிக்கை

செய்திப்பிரிவு

தாம்பரம் அருகே உள்ள வேங்கடமங்கலத்தில் இருந்து அகரம்தென் வழியாக தாம்பரத்துக்கும், வேளச்சேரி ரயில் நிலையத்துக்கும் சிறிய பேருந்துகளை இயக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் (எம்டிசி) சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் 100 சிறிய பேருந்துகளை (சிற்றுந்துகள்) இயக்குகின்றன. வீட்டின் அருகிலேயே சிறிய பேருந்துகள் வருவதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். அதே நேரத்தில் கிழக்கு தாம்பரம் அருகே வேங்கடமங்களம், அகரம்தென், மாடம்பாக்கம், பதுவஞ்சேரி, திருவஞ்சேரி, சேலையூர், பாரத்நகர் ஆகிய பகுதி களில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் கடந்த 12 ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை, வேளச்சேரி, தாம்பரம் போன்ற பல்வேறு இடங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் ஆட்டோ பிடித்தும், அதிக தூரம் நடந்தும் பேருந்து வரும் முக்கிய சாலைக்கு செல்கின்றனர். ஏழை, எளிய பள்ளி மாணவிகள் பல கிலோமீட்டர்கள் தூரம் நடந்தே அரசு பள்ளிகளுக்கு செல்கின்றனர்.

இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறியதாவது:

எங்கள் பகுதியைத் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் சிறிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாங்கள் பேருந்து வசதி இல்லாமல் பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு வருகிறோம். நாங்கள் வேலை பார்த்து சம்பாதிக்கும் பணத்தில் 50 சதவீதத்தை ஆட்டோக்களுக்கே தருகிறோம். அதனால் வேங்கடமங்கலத்தில் இருந்து அகரம்தென், சத்திய நகர் வழியாக தாம்பரத்துக்கும், வேளச்சேரி ரயில் நிலையத்துக்கும் சிறிய பேருந்துகளை இயக்கினால் நன்றாக இருக்கும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT