வணிகர்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாத முறையில் வாகனச் சோதனையை தேர்தல் கமிஷன் நடத்த வேண்டும் என தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேர்தல் விதிமுறைகளை கூறி வாகன சோதனை என்ற பெயரில் பறக்கும் படை கெடுபிடியால் சில்லரை வணிகர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் கமிஷனின் இந்த செயலால் தமிழகத்தில் வணிகம் முடங்கும் சூழல் உருவாகி உள்ளது.
வணிகர்களை எந்த வகையிலும் பாதிக்காத முறையில் வாகன சோதனையை தேர்தல் கமிஷன் நடத்திட வேண்டும்.
மேலும் வணிகர்கள் ரூபாய் ஐம்பதாயிரம் வரை கொண்டு செல்லலாம் என்பதை மாற்றி ரூபாய் மூன்று இலட்சம் வரை கொண்டு செல்லலாம் என்று தேர்தல் கமிஷன் ஆணை பிறப்பிக்க வேண்டும்.
வணிகர்கள் முறையான ஆவணங்கள் வைத்திருக்கும் பட்சத்தில்; பணத்தை பறிமுதல் செய்யாமல் சோதனை செய்யும் இடத்திலேயே அவர்களை விடுவிக்க வேண்டுகின்றோம்" இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.