முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணையைக் கட்டுவதற்கான ஆய்வுப்பணிகளை நிறுத்தக்கோரி, தமிழக அரசு சார்பில் கேரள அரசுக்கு காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் கடிதம் அனுப்பியுள்ளார்.
முல்லை பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகக் கூறி, கேரள அரசு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், பெரியாறு அணை அருகே 310 மீட்டர் தூரத்தில், புதிய அணையைக் கட்ட கேரள அரசு முடிவு செய்து நேற்று முன்தினம் மண், பாறைகளை நவீன இயந்திரங்கள் கொண்டு துளையிட்டு ஆய்வுப் பணியைத் தொடங்கியது.
இந்தப் பணியை, உடனடியாக நிறுத்தும்படி தமிழக அரசு சார்பில் கேரள அரசுக்கு காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணி கடிதம் அனுப்பி உள்ளார்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டும் முயற்சியை கேரள அரசு கைவிடக்கோரி, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், கேரள அரசு கண்டுகொள்ளாமல் புதிய அணை கட்ட ஆய்வுப் பணியைத் தொடங்கி விட்டது. புதிய அணையைக் கட்ட அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இதனை மீறி, கேரள அரசு வேண்டுமென்றே ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளது. நீதிமன்ற வழக்கைச் சுட்டிக் காட்டியும், ஆய்வுப் பணி மேற்கொள்ளும்போது ஏற்படும் அதிர்வுகளால், பெரியாறு அணை பாதிக்க வாய்ப்புள்ளதையும் எடுத்துக்கூறி, கேரள அரசுக்கு காவிரி தொழில்நுட்பத் தலைவர் கடிதம் எழுதி உள்ளார். எந்தெந்த இடத்தில் ஆய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என்பதை காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைமைப் பொறியாளர் செல்வராஜ் தலைமையிலான தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து, தமிழக அரசுக்கு தகவல் அளித்து வருகின்றனர் என்றார்.
முல்லைப் பெரியாறு அணை யின் மீட்புக்குழுத் தலைவர் ரஞ்சித் கூறும்போது, புதிய அணையைக் கட்டினால் தென்மாவட்டத்தில் உள்ள ஐந்து மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். குடிநீர் பிரச்சினையும் ஏற்படும். இது தொடர்பாக, தமிழக அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.