திராவிட கட்சிகளால் தமிழகத்தில் ஏற்படாத மாற்றத்தை நாம் தமிழர் கட்சி ஏற்படுத்தும் என்றார் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
திருச்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இன எழுச்சி மாநாட்டில் அவர் பேசியபோது, “தமிழர் இனம் மிகப்பெரிய வரலாற்றுக்குச் சொந்தமானது. இந்த இனம் தற்போது அடிமைப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த இனத்தை மீட்டெடுக்கவே இந்த மாநாடு. கலாச்சாரத்துக்கும், பண்பாட்டுக்கும் முன்மாதிரியானது தமிழ் இனம். தமிழர்களிடம் இருக்கின்ற மிகப்பெரிய குறை தாழ்வு மனப்பான்மை ஒன்றுதான், அந்த எண்ணத்தைக் கைவிடவேண்டும்.
திமுக, அதிமுக என மாறிமாறி ஆட்சி அமைந்தும் தமிழகத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. நாம் தமிழர் கட்சி அதற்கான மாற்றத்தை ஏற்படுத்தும்” என்றார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தனி ஈழம் மட்டுமே ஒவ்வொரு தமிழருக்குமான தாயக விடுதலை. இதற்காக பொது வாக்கெடுப்பு நடத்த இந்தியா குரல் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் விடுதலைப்புலிகள் மீதான தடையை ரத்து செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட வேண்டும்.
செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி 20 தமிழர்களை சுட்டுக்கொன்ற ஆந்திர அரசு அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபற்றிய நியாயமான விசாரணைக்கு மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.
கர்நாடகம், கேரளம் புதிய அணை கட்ட முயற்சிப்பதற்கு மத்திய அரசு உடனடியாக தடை விதிக்கவேண்டும். தமிழகத்தில் மது விற்பனையை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.