ஐஐடியின் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக விலக்கிட ஆவன செய்திட வேண்டுமென்று பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமி) வெளியிட்ட அறிக்கையில், "சென்னை ஐ.ஐ.டி. நிறுவனத்தில் உள்ள "அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம்" என்ற மாணவர்கள் அமைப்பு குறித்து, யாரோ ஒருவர் அனுப்பிய அநாமதேய - "மொட்டைக் கடிதத்தின்" காரணமாக, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை, இயற்கை நீதியின் அடிப்படையில் சம்பந்தப்பட்டோரிடம் எந்தவித விளக்கத்தையும் கேட்டுப் பெறாமல், கருத்துரிமையை நசுக்கும் வகையில், அந்த அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரத்துக்கு கட்டுப்பாடா?
அதனால் அமைதியாக இயங்கி வந்த அந்த நிறுவனம் தற்போது போராட்டக் களமாக மாறியுள்ளது. கிண்டியில் உள்ள அந்த ஐ.ஐ.டி. கல்வி நிலையத்தின் முன்பு தடையை நீக்கக் கோரி, மாணவர் அமைப்பினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
தரையில் படுத்துப் போராட்டம் நடத்திய மாணவர் ஒருவரின் சட்டையைப் பிடித்து போலீசார் தூக்கு கின்ற புகைப்படமும், பெண் மாணவர் ஒருவரைச் சுற்றி வளைத்து, ஏழெட்டுப் போலீசார் இரண்டு கைகளையும் பிடித்து இழுக்கின்ற புகைப்படமும், மற்றொரு மாணவரையும், ஐந்து வயதுச் சிறுமியையும் போலீசார் பிடித்திழுத்துக் கொண்டு செல்லும் புகைப்படமும் ஏடுகளிலே வெளிவந்திருப்பது சுதந்தரமான சிந்தனைத்திறனை எந்த அளவுக்கு மத்திய - மாநில அரசுகள் துச்சமென மதிக்கின்றன என்பதையே உணர்த்துகிறது.
மாணவர்களின் கருத்துரிமையினைக் காலில் போட்டு மிதிப்பதற்குச் சமமான இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது. மாணவர்களின் நியாயமான போராட்டத்தை ஆதரித்து பலவேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் அறிக்கைகள் வெளி வந்துள்ளன. கழகப் பொருளாளர் மு.க.ஸ்டாலினும் கண்டன அறிக்கை விடுத்துள்ளார்.
தி.மு.கழக மாணவர் அணிச் செயலாளர் கடலூர் இள.புகழேந்தி ஐ.ஐ.டி. மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்து 1-6-2015 அன்று காலையில் கழக மாணவர் அணியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார்.
அதிமுக மவுனம் ஏன்?
தமிழக அ.தி.மு.க. அரசு மாணவர்களின் போராட்டம் பற்றியும், அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் திருப்பெயர்களில் அமைந்த வாசகர் வட்டத்தைப் பற்றியும், அது தடை செய்யப்பட்டதைப் பற்றியும் எந்தவிதமான கருத்தையும் வெளிப்படையாகத் தெரிவிக்காமல், மத்திய அரசின் கவனத்திற்கும் கொண்டு செல்லாமல் வாய் மூடி மௌனம் சாதிப்பது தடை செய்யப்பட்ட நடவடிக்கையை அதிமுக அரசு ஆதரிக்கிறதோ என்ற அய்யப்பாட்டினையே அனைவருடைய மனதிலும் தோற்றுவித்திருக்கிறது.
சாதிப் பாகுபாடுகள், மதவாதம், மூட நம்பிக்கைகள், பெண் அடிமைத் தனம் போன்றவற்றின் பின்னணிக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்கான முற்போக்குக் கருத்துகளைப் பரப்பி சமத்துவமான-அறிவியல் பூர்வமான சமுதாயத்தை நிலை நாட்டுவதற்குக் கல்லூரிக் காலத்திலேயே தயார் செய்து கொள்வது என்ற சீரிய நோக்கங்களோடு மாணவர்களைச் சிந்திக்கவும், அச்சமின்றி விவாதிக்கவும் களம் அமைத்துத் தரும் ஜனநாயக மையமாக இந்த வாசகர் வட்டம் தோற்றுவிக்கப்பட்டிருப்பதாக மாணவர் அமைப்பினர் கூறுகிறார்கள்.
21-12-1947 அன்று "திராவிட நாடு" இதழில் "கல்லூரி மாணவர்கள் மக்கள் மனதிலே பதிய பகுத்தறிவு இயக்கத்துக்கு எந்த வகையில் பணியாற்ற முடியும்?" என்ற ஒரு கேள்விக்கு பதிலளித்த பேரறிஞர் அண்ணா "கட்சி மாச்சரியங்களை மறந்து, பகுத்தறிவு பரவ வேண்டுமென்ற ஒரு நோக்கத் துக்காகக் கூடி, நமது நாட்டு மக்களின் வாழ்க்கையிலே ஊறிப் போயுள்ள பழைய, பயனற்ற, கேடு தரும் எண்ணங்களை அகற்றும் வகையிலே பேசுவது, பாடுபடுவது, ஓவியங்கள் தீட்டுவது, பொருட்காட்சிகள் நடத்துவது, நாடகங்கள் நடத்துவது, விஞ்ஞானிகள், வீரர்கள், அறிஞர்கள் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளை எடுத்துக் கதை வடிவில் கூறுவது, உலகிலே எங்கெங்கு, என்னென்ன வகையான மூடநம்பிக்கைகள் இருந்து வந்ததை அவை எப்படி அகற்றப்பட்டன என்பவற்றை விளக்குவது - இவ்விதமாகப் பணியாற்றலாம் - பலனுண்டு" என்று கூறியுள்ளதை இந்த நேரத்தில் நினைவு கூர்ந்திட விரும்புகிறேன்.
பேரறிஞர் அண்ணா விரும்பியதையே இந்த வாசகர் வட்டம் நிறைவேற்றி வருவதாக எண்ணுதற்கு இடமுண்டு. ஆனால் சிந்தனைத் தடாகங்களான இப்படிப்பட்ட அமைப்புகளுக்கு என்ன காரணத்தாலோ தடை விதிக்க வேண்டுமென்று மத்திய அரசினர் எண்ணுகிறார்கள்.
குறிப்பாக மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை சார்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவில் இந்திய மொழிகளின் முக்கியத்துவத்தைக் குறைத்து, மதிப்பிடும் விதமாக அந்நிய மொழி வளர்ச்சியை ஆதரிப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது.
இத்தனை ஆண்டுகளாக அந்நிய மொழிக்கு அடிமைப்பட்டவர்களாக இருந்து விட்டதால் நாம் இதைக் கண்டு கொள்ள வில்லை. ஜெர்மன் மொழியை நீக்கி, சமஸ்கிருதம் அல்லது வேறு இந்திய மொழியைக் கொண்டு வருவது என்பது இந்தியாவை முழுமையாக அடிமை மனநிலையிலிருந்து நீக்கும் நடவடிக்கையில் ஒன்று தான்" என்று குறிப்பிட்டதன் காரணமாக நாட்டில் ஏற்பட்ட சர்ச்சைகளையும், அதனைத் தொடர்ந்து அதே மனித வள மேம்பாட்டுத்துறை தற்போது தோற்றுவித்திருக்கும் சர்ச்சையையும் யாரும் மறந்து விட முடியாது.
பிரதமர் தலையிட வேண்டும்:
மத்திய அரசின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஜனநாயக அமைப்புக்குத் தடை விதிப்பது போன்ற இப்படிப்பட்ட தேவையற்ற பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தராமல் இருப்பது போலத் தோன்றினாலும்; அவருக்குக் கீழேயுள்ள அமைச்சர்கள் தன்னிச்சையாக, சர்வாதிகார பாணியில் இது போன்ற பிரச்சினைகளில் தலையிடுவது இளைய சமுதாயத்தின் சிந்தனையோட்டத்தைச் சிதைத்து நாட்டின் அமைதியைக் கெடுக்கத் தான் வழி வகுக்கும்.
எனவே இந்தப் பிரச்சினையில் உடனடியாக பிரதமர் அவர்கள் நேரடியாகத் தலையிட்டு, சென்னையில் உள்ள ஐ.ஐ.டி. நிறுவனத்தில் அமைதியையும், ஆரோக்கியமான கல்விச் சூழலையும் நிலைநாட்ட உதவிடுவதோடு, அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக விலக்கிட ஆவன செய்திட வேண்டுமென்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.