மதுரை மாவட்டம், சேடபட்டி அருகே வீட்டுக்குள் எரித்துக் கொல்லப்பட்ட 7 பேரில் ஒருவரான மாணவி சங்கீதா எஸ்எஸ்எல்சி தேர்வில் தேர்ச்சி பெற்று 325 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
சேடபட்டி அருகே குமாரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு (60). இவரது மனைவி பேச்சியம்மாள் (55). மகன் கண்ணன் (24). பி.ஏ பட்டதாரியான இவரும், பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினரான தங்கவேலு மகள் பாண்டீஸ்வரியும் (22) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் காதலித்துள்ளனர். 27.3.2013 அன்று பேரையூர் முருகன் கோயிலில் பாண்டீஸ்வரியை திருமணம் செய்துகொண்ட கண்ணன், அதன்பின், அவருடன் சேர்ந்து வாழ மறுத்தார். மேலும் பாண்டீஸ்வரியிடமிருந்து விவாகரத்து பெற்று, தனது சகோதரி மகள் சங்கீதாவை 2-வது திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் கண்ணன் வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்தபோது அங்கு சென்ற பாண்டீஸ்வரி, அவரது தாய் முருகேஸ்வரி, தம்பி ராஜபாண்டி ஆகியோர் வீட்டை வெளிப்புறத்தில் பூட்டி தீ வைத்து கொளுத்தினர். இதில் கண்ணன், அவரது தந்தை வேலு, தாய் பேச்சியம்மாள் ஆகியோருடன், கணவரிடம் கோபித்துக்கொண்டு இங்குவந்து தங்கியிருந்த கண்ணனின் அக்கா சுகந்தி, அவரது மகள் சங்கீதா (17), மகன்கள் சஞ்ஜித் (12), வினித் (10) ஆகிய 7 பேரும் இறந்தனர்.
இவர்களில் சங்கீதா சேடபட்டியிலுள்ள அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியிருந்தார். அதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில் அவர் தமிழில் 68, ஆங்கிலம் 49, கணிதம் 75, அறிவியல் 87, சமூக அறிவியல் 46 என மொத்தம் 325 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார். வறுமையான சூழலில் படித்து, தேர்ச்சி பெற்றுள்ள சங்கீதாவின் வெற்றிச் செய்தியை தெரிந்துகொள்ள அவர் மட்டுமின்றி, அக்குடும்பத்தில் ஒருவர்கூட இல்லாதது பள்ளி ஆசிரியர்கள், சக மாணவ மாணவிகளிடம் சோகத்தை ஏற்படுத்தியது.