ஓட்டுநர்கள் அடையாள வில்லை பெறுவதற்காக தாங்கள் எழுதும் 8-ம் வகுப்புத் தேர்வில் ஒவ்வொரு பாடத்துக்கும் குறைந்தபட்சம் 25 மதிப்பெண்கள் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யக் கோரி நூற்றுக்கணக்கான டாக்ஸி, ஆட்டோ ஓட்டுநர்கள் கோவை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் முகாமில் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக மனுக்கள் அளிக்கப்பட்டன.
நூற்றுக்கணக்கான ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பது:
“8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும்தான் ஆட்டோ, டாக்ஸி மற்றும் கனரக வாகன ஓட்டுநர்களுக்கான பெயர் அடையாள வில்லை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் 8-வது படிப்பு இல்லாமல் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. போலீஸார் பிடித்து அபராதம் விதிக்கின்றனர். அதை தவிர்க்க, 5 ஆயிரம் பேருக்கும் மேல் கடந்த சில ஆண்டுகளில் டியூட்டோரியல் மூலம் 8-ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் தேர்ச்சி பெற முடியாமல் திண்டாடுகின்றனர்.
தற்போது 8-ம் வகுப்பு படித்துவரும் மாணவர்களுக்கு கல்வித் துறையே இலவசமாக 40 மதிப்பெண்கள் அளிக்கிறது. ஆனால், டியூட்டோரியலில் படிக்கும் எங்களுக்கு ஒரு மதிப்பெண் கூட இலவசமாக தராததால் வெற்றி பெறுவதில் சிரமம் உள்ளது. எனவே கருணை அடிப்படையில் குறைந்தபட்சம் ஒவ்வொரு பாடத்துக்கும் 25 இலவச மதிப்பெண்கள் வழங்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளனர். கோரிக்கையை வலியுறுத்தி தனித்தனியே மனுக்க ளுடன் ஓட்டுநர்கள் திடீரென்று முற்றுகையிட்டதால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது.
மதிமுக கோரிக்கை
“கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பம் தர 19-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தப் பள்ளியும் சேர்க்கையை தீவிரப்படுத்தவில்லை. பள்ளிகளுக்கு இந்த திட்டத்தில் பணம் தரப்படும் என்று அரசு தற்போது அறிவித்துள்ளது. அதனால், சேர்க்கைக்கான காலவரம்பை நீட்டிக்க வேண்டும்” என்று மதிமுக மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன், ஆட்சியரிடம் மனு அளித்தார்.
விவசாயிகள் சங்கம்
“சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்றுகளை இ-சேவை மையங்களில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள மாணவர்கள், பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அவ்வாறு விண்ணப்பித்த வர்களுக்கு 15 நாட்களுக்குள் சான்றுகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த புதிய நடை முறையால் சான்றுகள், குறித்த நேரத்தில் கிடைக்காமல் மாணவர்கள் திண்டாடுகின்றனர். இதனால், கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதில் சிக்கல் ஏற்படுகிறது.
அதேபோன்று, திருமண உதவித் தொகை பெற வருமானச் சான்று பெற்று விண்ணப்பிக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு கீழ் இருந்தால்தான் உதவித் தொகை கிடைக்கும் என்ற நிலையில், இ-சேவை மையங்களால் வழங்கப்படும் வருமானச் சான்றில் 96 ஆயிரத்துக்கும் மேல் குறிப்பிட்டு வழங்கப்பட்டுள்ளது. இதனால் தகுதி இருப்பவர்கள் பலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்டத் தலைவர் சு.பழனிச்சாமி அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளார்.