சூளையில் இளைஞர் ஒருவரின் முகத்தில் மிளகாய் பொடி தூவி வெட்டிக் கொன்ற கும்பல் ஆட்டோவில் தப்பிச் சென்றது. இது தொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை பல்லவன் சாலை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்(26). இவர் நேற்று மாலையில் சூளை நடராஜர் திரையரங்கம் அருகே டி.கே.முதலி தெருவில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது 3 தெருக்கள் சந்திக்கும் ஓர் இடத்தில் மறைந்திருந்த 2 பேர் மிளகாய் பொடியை எடுத்து கார்த்திக்கின் முகத்தில் வீசினர். இதனால் நிலை குலைந்த அவர் மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு கண்ணை கசக்கிக்கொண்டிருந்தார். அருகே ஆட்டோவில் மறைந்திருந்த ஒரு கும்பல் அரிவாளால் அவரை வெட்டியது.
உடனே அங்கிருந்து தப்பிப்பதற்காக சில மீட்டர் தூரம் அவர் ஓடிய நிலையில் ஒரு கடையின் முன்பு அவரை கீழே தள்ளி சரமாரியாக அந்த கும்பல் வெட்டியது.
ஆட்டோவில் தப்பினர்
இதில் சம்பவ இடத் திலேயே கார்த்திக் பரிதாபமாக இறந்தார். அவர் இறந்ததை உறுதி செய்துகொண்ட அந்த கும்பல் அங்கிருந்து ஆட்டோ வில் தப்பிச் சென்றது.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீ ஸார் உடலை கைப்பற்றி ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஜோசப், குணசீலன், ஆரோக் கியதாஸ், பிரகாஷ் ஆகிய 4 பேரை வேப்பேரி போலீஸார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.