தமிழகம்

நீரில் மூழ்கி அடுத்தடுத்து 5 சிறார்கள் பலி: செங்கல் சூளைகளில் போலீஸார் திடீர் ஆய்வு

செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் உள்ள இரு தனியார் செங்கல் சூளைகளின் பள்ளங்களில் தேக்கி வைக்கப்பட்ட மழை நீரில் மூழ்கி 5 சிறுவர்- சிறுமிகள் உயிரிழந்த சம்பவங்களை தொடர்ந்து, நேற்று திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் உள்ள தனியார் செங்கல்சூளைகளில் போலீஸார் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே உள்ள கொட்டியம்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் செங்கல் சூளை பள்ளத்தில் தேக்கி வைக்கப்பட்ட நீரில், கடந்த 18-ம் தேதி தொழிலாளி ஒருவரின் குழந்தைகளான 3 சிறுவர்- சிறுமிகள் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இச்சம்பவம் நடந்த மறுநாளான நேற்று முன்தினம், திருவள்ளூர் அருகே உள்ள அயத்தூரில் உள்ள தனியார் செங்கல் சூளையில் தேக்கி வைக்கப்பட்ட மழைநீரில், இரு தொழிலாளிகளின் குழந்தைகளான இரு சிறுவர்கள் குளித்த போது, நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த சம்பவங்களை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சாம்சன், மாவட்டத்தில் உள்ள அனைத்து செங்கல் சூளைகளையும் ஆய்வு செய்ய காவல் நிலையங்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளைகளை ஆய்வு செய்யும் பணியினை நேற்று போலீஸார் தொடங்கினர். செங்கல்சூளையில் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு உள்ள பாதுகாப்பு அம்சங்கள், மழைநீர் கால்வாய் மற்றும் பள்ளங்கள் உள்ளிட்டவை பாதுகாப்பான முறையில் உள்ளனவா? என்பது பற்றி வருவாய்த் துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT