அமலாக்கப்பிரிவு தொடர்ந்த 7 வழக்குகளில் 3 வழக்குகளில் இருந்து சசிகலா, தினகரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
ஜெ.ஜெ. டிவி நிறுவனத்துக்கு பணம் பரிவர்த்தனை செய்தது, ஆவணம் இல்லாமல் பணம் பரிமாற்றம் செய்தது என சசிகலா, தினகரன் ஆகியோர் மீது அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் எழும்பூர் நீதிமன்றத்தில் அந்நியச் செலாவணி மோசடி வழக்குகளைத் தொடர்ந்தனர். மொத்தம் 7 வழக்குகள் இவர்கள் மீது பதிவு செய்யப்பட்டன.
இதில் 5 வழக்குகள் எழும்பூரில் உள்ள முதலாவது பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்திலும், 2 வழக்குகள் இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்திலும் நடந்து வந்தன. இந்த 7 வழக்குகளையும் நீதிபதி தட்சிணாமூர்த்தி விசாரித்து வருகிறார்.
முதலாவது பொருளாதார குற்ற வியல் நீதிமன்றத்தில் உள்ள ஒரு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று சசிகலாவும், 2 வது நீதிமன்றத்தில் உள்ள 2 வழக்குகளில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று தினகரனும் மனு செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது ஒரு வழக்கில் இருந்து சசிகலாவையும், 2 வழக்குகளில் இருந்து தினகரனையும் விடுவித்து நீதிபதி தட்சிணாமூர்த்தி உத்தரவிட்டார். மேலும், 3 வழக்குகளில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று பாஸ்கரன் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையை ஜூன் 3-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.