தமிழகம்

மாணவரை தாக்கிய எம்எல்ஏ மீது நடவடிக்கை கோரி முதுநிலை மருத்துவ மாணவர்கள், பயிற்சி டாக்டர்கள் தர்ணா போராட்டம்

செய்திப்பிரிவு

மருத்துவ மாணவரை தாக்கிய அவிநாசி தொகுதி எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதுநிலை மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் சென்னை மருத்துவக் கல்லூரியில் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை ஓமந்தூரார் எம்எல்ஏ விடுதி சிகிச்சை மையத்தில் கடந்த 11-ம் தேதி இரவுப் பணியில் இருந்த சென்னை மருத்துவக் கல்லூரி முதுநிலை மருத்துவ மாணவரை, திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதி எம்எல்ஏ கருப்பசாமி தாக்கியதாக சொல்லப்படுகிறது.

இதனைக் கண்டித்து அவிநாசி எம்எல்ஏ கருப்பசாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதுநிலை மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் சென்னை மருத்துவக் கல்லூரியில் நேற்று காலை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு பயிற்சி டாக்டர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர் சங்கத்தின் தலைவர் பிரவீண்குமார், இணைச் செயலாளர் ஜானகிராமன் தலைமையில் நடந்த தர்ணா போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட முதுநிலை மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் பங்கேற்றனர். இவர்களின் போராட்டத்துக்கு புதிதாக தொடங்கப்பட்ட அரசு டாக்டர்கள் மற்றும் அரசு பட்டமேற்படிப்பு டாக்டர்கள் சங்கத்தினர் (எஸ்டிபிஜிஏ) ஆதரவு தெரிவித்தனர். இதனால் சென்னை மருத்துவக் கல்லூரியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது தமிழ்நாடு பயிற்சி டாக்டர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர் சங்கத்தின் இணைச் செயலாளர் ஜானகிராமன், எஸ்டிபிஜிஏ சங்கத்தின் அமைப்புச் செயலாளர் டாக்டர் ராமலிங்கம் ஆகியோர் கூறியதாவது:

அவிநாசி எம்எல்ஏ கருப்பசாமி உடல்நிலை சரியில்லை என்று தெரிவித்ததால், முதுநிலை மருத்துவ மாணவர் சிகிச்சை அளித்தார். ஆனால் அவர் தகாத வார்த்தைகளால் பேசி, மாணவரின் கழுத்தை நெரித்து தாக்கியுள்ளார். இதுபற்றி மருத்துவமனை டீன் டாக்டர் விமலாவிடம் புகார் அளித்து இருக்கிறோம். விசாரணை நடத்தி அவிநாசி எம்எல்ஏ கருப்பசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனையை பாதுகாப்பு பகுதியாக அறிவிக்க வேண்டும். மருத்துவமனையில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை முறைப்படி அமல் படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர்.

SCROLL FOR NEXT