தமிழகத்தில் மின்தட்டுப்பாடு என்ற நிலை மாறி, மின்சாரமே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது என, ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து, ஸ்டாலின் செவ்வாய்க் கிழமை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆவடியில் நடந்த பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேசியதாவது:
மத்தியில் நிலையான, நேர்மை யான நியாயமான, மதச்சார்பற்ற ஆட்சி உருவாக்க திமுக கூட் டணியை ஆதரிக்க வேண்டும். கலைஞர் சுட்டிக் காட்டும் நபர்தான் அடுத்த பிரதமராக வருவார். முதல மைச்சர் ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் மட்டும்தான் மக்களைப் பற்றி நினைப்பார். தேர்தல் முடிந்ததும் மறந்துவிடுவார்.
அதுவும் தேர்தல் நேரத்தில் மக்களை சந்திக்க சாலை வழியாக முதல்வர் வர மாட்டார். ஹெலிகாப்டரில்தான் பறந்து வருவார். அவர் வானில் பறக்கும் போது, தரையில் போலீஸார் பாதுகாப்பு அளிப்பர். போலீஸாரை நினைத்தால் பாவமாக உள்ளது.
இந்த ஆட்சியில் 58 வயதானவர்களுக்கு இலவச பஸ் பாஸ், இலவச வீட்டுமனைப் பட்டா தருவதாக கூறினார்கள். 6 ஆயிரம் கிராமங்களுக்கு 60 ஆயிரம் கறவை மாடுகளை கொடுத்து தமிழகத்தில் வெண்மைப் புரட்சி ஏற்படுத்துவதாக கூறினார்கள். ஆனால், அரசு வழங்கிய இலவச கால்நடைகள் எல்லாம் கோமாரி நோய் வந்து இறந்தன.
கடந்த திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் பயன்பெறும் வகையில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆவடியில் 160 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம், 103 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மின் தட்டுப்பாடு என்ற நிலை மாறி, மின்சாரமே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுக அரசு பதவிக்கு வந்த உடன் செப்டம்பர் மாதத்துக்குள் மின் தட்டுப்பாடு நீங்கும். அக்டோபரில் மின்சார பிரச்சினையே இருக்காது என வாக்குறுதி அளித்தார்கள். ஆனால், அவர்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றினார்களா? இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.