சென்னை விமான நிலையத்தில் கட்டணம் வசூலிப்பதற்காகவே திட்டமிட்டு குறுகிய சாலை அமைக்கப்பட்டிருப்பதாக உங்கள் குரலில் வாசகர் புகார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக கோட்டூர் கார்டனை சேர்ந்த அருளானந்தம் என்பவர் ‘தி இந்து’ உங்கள் குரல் தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு கூறியதாவது:
சென்னை விமான நிலையத்தின் முன் பகுதியில் புதிதாக அகலமான சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த சாலையை முக்கிய பிரமுகர்களுக்காக ஒதுக்கிவைத்துள்ளனர். அதற்கு அருகில் உள்ள குறுகலான சாலைதான் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. அங்கு கார்களை பார்க்கிங் செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தின் உள்ளே சென்று வெளியே வர கார்களுக்கு 10 நிமிடம் வரை இலவசம். 10 நிமிடத்தில் இருந்து 1 மணி நேரம் வரை ரூ.135 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அந்த சாலையின் வழியே உள்ளே சென்று பயணிகளை அழைத்துக் கொண்டு 10 நிமிடங்களில் யாராலும் வெளியே வரமுடியாது. அந்த சாலையில் கார்கள் பார்க்கிங் செய்யப்பட்டுள்ளதால், எப்படியும் 10 நிமிடத்தை தாண்டிவிடும். கட்டணம் வசூலிப்பதற்காகவே திட்டமிட்டு இதுபோன்று செய்கின்றனர். இதனை மாற்றி 10 நிமிடத்தில் இருந்து 15 நிமிடம், 15 நிமிடத்தில் இருந்து 30 நிமிடம், 30 நிமிடத்தில் இருந்து 60 நிமிடம் என்று தனியாக கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். மேலும் புதிதாக அமைக்கப்பட்ட சாலையை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விடவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.