மதுரை: எப்கியூஎல் மோசடி தொடர்பாக இதுவரை 43 ஆயிரம் பேர் புகார் அளித்துள்ளனர் என அரசுத் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த சாந்தகுமார் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் எப்கியூஎல் செயலி வழியாக ரூ.1,000 கோடிக்கும் மேல் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டுள்ளனர்.
இந்த செயலி கிரிப்டோ கரன்சி, அமெரிக்க டாலர் போன்ற சர்வதேசத் தொடர்புடையது. இணையத்தைப் பயன்படுத்தி மோசடி நடந்துள்ளது. இதனால் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், எப்கியூஎல் மோசடி தொடர்பாக பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 43 ஆயிரம் புகார்கள் வந்துள்ளதோடு இன்னும் புகார்கள் வருகின்றன. மனுதாரர் பாதிக்கப்பட்டவர்.
அவர் பொது நல மனுத் தாக்கல் செய்ய முடியாது என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், மக்கள் அவர்களாகவே விரும்பி அதிக வட்டிக்கு ஆசைப்பட்டுப் பணத்தை முதலீடு செய்துள்ளனர். முகமுடிக் கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்து பணத்தை எடுத்துச் சென்றார்களா? இதை எப்படி பொதுநல மனுவாக விசாரிக்க முடியும், என்றனர். பின்னர், தலைமை அரசு வழக்கறிஞர் ஆஜராவதற்காக விசாரணையை நவ. 13-க்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.