திருவொற்றியூர், சத்தியமூர்த்தி நகரில் கொசுப்புழு உருவாக வாய்ப்புள்ள பயன்படாத பொருட்களை அகற்றும் மாநகராட்சிப் பணியாளர்கள்.
சென்னை: மாநகராட்சி சார்பில் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக கொசு உற்பத்தி ஆதாரங்களான பழைய டயர்கள், பிளாஸ்டிக் உள்ளிட்ட தேவையற்ற பொருட்கள் சுமார் 43 டன் அளவுக்கு சேகரித்து அகற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநகராட்சிப் பகுதிகளில் அலுவலர்கள் மற்றும் களப் பணியாளர்களால் வீடுவீடாகச் சென்று டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 3,703 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, கொசுப்புழு உருவாக வாய்ப்புள்ள டயர், தேங்காய் ஓடுகள் உள்ளிட்ட தேவையற்ற பொருட்களைக் கண்டறிந்து அகற்றப்பட்டு வருகிறது.
அக்.1 முதல் 24-ம் தேதி வரை 8,373 கிலோ பயன்படுத்தப்பட்ட டயர்கள் மற்றும் 35,056 கிலோ தேவையற்ற பயன்படுத்தப்படாத பிளாஸ் உள்ளிட்ட பொருட்கள் 43,429 கிலோ (43 டன்) கண்டறியப்பட்டு மாநகராட்சிப் பணியாளர்களால் அகற்றப்பட்டன.
கொசுப்புழுக்கள் உற்பத்தி கண்டறியப்பட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், கட்டுமானப் பகுதிகள், வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று வரை ரூ.37,05,500 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் அக்டோபர் மாதத்தில் மட்டும் ரூ.11,44,100 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் வீடுகள், கட்டுமான நிறுவனங்கள், வணிக வளாகங்கள், பெரிய அளவிலான நிறுவனங்கள் உள்ளிட்ட தங்களது இடங்களில் நீர் தங்குவதற்கான பழைய டயர்கள், தொட்டிகள், தேங்காய் ஓடுகள் உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை அகற்றி, நீர்த் தேக்கமின்றி வைத்து, மாநகராட்சியின் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.