தமிழகம்

ஆராய்ச்சி கல்வியில் விஐடி-க்கு இரண்டாம் இடம்: வேந்தர் ஜி.விசுவநாதன் தகவல்

செய்திப்பிரிவு

ஆராய்ச்சி கல்வியில் விஐடி பல்கலைக்கழகம் நாட்டில் இரண்டாமிடத்தில் உள்ளதாக அதன் வேந்தர் ஜி.விசுவநாதன் தெரிவித்தார்.

விஐடி பல்கலைக்கழக தின விழா மற்றும் விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் அண்ணா அரங்கில் நேற்று நடந்தது. விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார். பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் சிறந்த மாணவியாக தேர்வு செய்யப்பட்ட டாமினி அகர்வாலுக்கு தங்கப் பதக்கத்தை ஜி.விசுவநாதன் வழங்கினார். பின்னர், அவர் பேசும்போது, “விஐடி பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு கல்வி மற்றும் விளையாட்டு பயிற்சி நிதியாக ரூ.6.28 கோடி வழங்கப்படுகிறது. நாட்டில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 33 சதவீதமாக உள்ளது. ஆனால், பல்கலைக்கழகத்தில் கல்வி உதவித்தொகை பெறுபவர்களில் 50 சதவீதத்துக்கும்மேல் பெண்கள்.

வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது நாம் கல்வியில் அதிக முன்னேற்றம் காண வேண்டும். நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப உயர்கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் வரவேண்டும். இந்தியாவில் கல்வி நிறுவனங்களை அரசு அடிமைத்தனமாக கையாளும் நிலை உள்ளது. இது மாற்றப்பட வேண்டும்.

பல்கலைக்கழகங்களில் அரசியல் தலையீடு அதிகளவில் உள்ளது. இதில், மோடி அரசு என்ன செய்யப்போகிறது என்று பார்க்க வேண்டும். விஐடி பல்கலைக்கழகம் ஆராய்ச்சி கல்வியில் நாட்டில் இரண்டாமிடத்தில் உள்ளது. முதலிடம் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

நிகழ்ச்சியில் கவுரவ விருந்தினராக மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி தலைவர் கருமுத்து டி.கண்ணன் கலந்துகொண்டு பேசும்போது, “மாணவர்கள் படிக்கும் காலத்தில் கல்வி அறிவு ஒன்றை மட்டும் பெறுவது இல்லாமல் வெளியிடங்களில் கிடைக்கும் அறிவு மற்றும் அனுபவங்களை பெறவேண்டும். விஞ்ஞான வளர்ச்சியில் புதிய தொழில்நுட்பங்களை கையாள வேண்டியுள்ளது. இதனை அறியும் ஆற்றலை மாணவர்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

நிகழ்ச்சியில், விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT