தமிழகம்

குறைந்த விலையில் தரமான துவரம், உளுத்தம் பருப்பு: புதிய திட்டம் தொடங்கி வைத்தார் ஜெயலலிதா

செய்திப்பிரிவு

வெளிச்சந்தையில் உயர்ந்து வரும் துவரம் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்புகளின் விலையினைக் கட்டுப்படுத்தும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையாக அரை கிலோ துவரம் பருப்பு 53.50 ரூபாய்க்கும், அரை கிலோ உளுந்தம் பருப்பு ஏ ரகம் 56 ரூபாய்க்கும், 'பி' ரகம் 49.50 ரூபாய்க்கும் விற்கப்படும் புதிய விற்பனை திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா ஞாயிறன்று தொடங்கி வைத்தார்.

இது குறித்து வெளியான செய்தி வெளியீட்டில் கூறியிருப்பதாவது:

விளைச்சல் குறைந்த நேரங்களில், வெளிச்சந்தையில் காய்கறிகள் உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை சில நேரங்களில் கட்டுக்கடங்காமல் உயர்ந்து விடுகின்றது. அதே போல அதிகமான விளைச்சல் காரணமாக விளைபொருட்களுக்கு சில நேரங்களில் நியாயமான விலை கிடைப்பதில்லை. இதனால் விவசாயிகளும், ஏழை, எளிய நடுத்தர மக்களும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். எனவே விவசாயிகளுக்கு நியாயமான விலையும் ஏழை, எளிய மக்களுக்கு தரமான அத்தியாவசிய பொருட்கள் நியாயமான விலையிலும் கிடைக்க வழிகோலும் 'விலை நிலைப்படுத்தும் நிதி' யை ஜெயலலிதா 2011 -ஆம் ஆண்டு ஏற்படுத்தினார்.

வெளிச்சந்தையில் தற்போது துவரம் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்புகளின் விலை உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்விலிருந்து மக்களை காத்து வெளிச் சந்தை விலையினை கட்டுக்குள் வைத்திடும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையாக, தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையம், சென்னை - தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் வாயிலாக தரமான துவரம் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு ஆகியவை கூட்டுறவுத்துறை மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, கூட்டுறவுத்துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நடத்தும் 25 விற்பனை மையங்கள் மூலம் அரை கிலோ பாக்கெட்டுகளில் துவரம் பருப்பு 53.50 ரூபாய்க்கும், உளுந்தம் பருப்பு ‘ஏ’ ரகம் 56 ரூபாய்க்கும், ‘பி’ ரகம் 49.50 ரூபாய்க்கும் விற்கப்படும் புதிய விற்பனை திட்டத்தை ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் துவக்கி வைத்தார்.

இன்று துவக்கி வைக்கப்பட்ட குறைந்த விலையில் தரமான துவரம் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு விற்பனை, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் - சென்னை அண்ணாசாலை, ஆர்.ஏ.புரம், பெசன்ட்நகர், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, அசோக் நகர், இராயப்பேட்டை நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், செனாய் நகர், பெரியார் நகர், மீனம்பாக்கம் மற்றும் ஒக்கியம் துரைப்பாக்கம் விற்பனை மையங்கள்; பூங்காநகர் மொத்த விற்பனை பண்டகசாலையின் - அண்ணாநகர் கிழக்கு, செனாய் நகர் மற்றும் அசோகா நகர்; அடையாறு மகளிர் கூட்டுறவு பண்டகசாலை விற்பனை நிலையம்; ஆர்.வி.நகர்- வடசென்னை கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம்; இராயபுரம்-வண்ணாரப்பேட்டை கூட்டுறவு பண்டகசாலை விற்பனை மையம்; காஞ்சிபுரம் மாவட்ட மொத்த விற்பனை பண்டகசாலையின் - நந்தம்பாக்கம் மற்றும் போரூர் விற்பனை மையங்கள்; தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் - பெரியார் நகர், இந்திரா நகர், கோபாலபுரம், அண்ணாநகர் மேற்கு மற்றும் நந்தனம் அமுதம் அங்காடிகள் என சென்னையிலுள்ள 25 விற்பனை மையங்கள் மூலம் விற்பனை செய்யப்படும்.

இவ்வாறு அந்த செய்தி வெளியீட்டில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT