சாதாரண தேநீர் கடையில் வாழ்க்கையைத் தொடங்கிய நரேந்திர மோடி இன்று நாட்டின் பிரதமர் நிலைக்கு உயரப்போகிறார். இதுகுறித்து பல்வேறு நகரங்களில் இருக்கும் டீ மாஸ்டர்களிடம் கருத்து கேட்டோம்.
முகமது அலி, ஸ்டெர்லிங் சாலை, சென்னை:
டீக்கடைக்காரராக இருந்த மோடி, பிரதமராக பதவியேற்க இருப்பது என்னைப் போன்ற டீ மாஸ்டர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி.
தமிழகத்தில் பாஜக கூட்டணி வெற்றி பெறாவிட்டாலும், மோடி ஒருபோதும் தமிழக மக்களை எதிரியாகப் பார்க்க மாட்டார்.”
லோகநாதன், நெத்திமேடு, சேலம்:
பா.ஜ.க, ஆட்சிக்கு வருவது வரவேற்கத்தக்கது. மோடி தமிழக மக்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து மாநில மக்களுக்கும் நல்லது செய்வார் என்று நம்புகிறோம். அதிமுக மூலம் நல்லது கிடைக்கும் என்று மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர். இந்த வெற்றி பரிசை அதிமுக தக்க முறையில் பயன்படுத்தி, மக்களுக்கான பணியை ஆற்றிட வேண்டும்.
ஏ.ராஜன், குற்றாலம்:
இளமையில் வறுமையை அனுபவித்த காரணத்தால் ஏழைகளின் கஷ்டங்களை மோடி அறிவார். அதனால் அவர் மக்களுக்கு நல்லதுதான் செய்வார். மோடிக்கு தமிழக மக் கள் ஆதரவு அளிக்கவில்லை என்றாலும் காங்கிரஸை போல தமிழர்களை அவர் புறக்கணிக்க மாட்டார்.
அப்துல் ரகுமான், அண்ணா பேருந்து நிலையம், மதுரை:
நான் கேள்விப்பட்ட வரை மோடி நிர்வாகத்திறன் மிக்கவர். அதனால், காங்கிரஸை போல மோசமான ஆட்சியைத் தரமாட்டார். அதேசமயம் அவர் இந்து, முஸ்லீம் என பாகுபாடு காட்டாமல் அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்த வேண்டும். தமிழகத்துக்கு நல்ல திட்டங்களை கொடுக்க வேண்டும்.
அப்துல்லா, மத்திய பேருந்து நிலையம், திருச்சி:
எல்லாவற்றுக்கும் ஒரு மாற்றம் தேவை இல்லையா? மோடி குஜராத் மாநிலத்தை முதன்மை மாநிலமாக மாற்றியிருப்பதாக சொல்கிறார்கள். அதேசமயம் மோடி தமிழகத்துக்கு பயன் தரக்கூடிய வகையில் செயல்படுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், ஒன்று மோடி முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படக்கூடாது.
லதா, கோவை:
தேசிய அளவில் இது மோடியின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. மோடி பாகுபாடு பார்க்காமல் தமிழகத்துக்கு நல்லத் திட்டங்களைக் கொண்டு வர வேண்டும். முதல்வர் ஜெயலலிதா ஏழைகளுக்கு நிறையத் திட்டங்களை கொண்டு வந்தார்கள். அதுவே அவரது வெற்றிக்குக் காரணம்.