தமிழகம்

சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் கும்பாபி ஷேகத்தை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் கும்பாபிஷேகம் 28 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் நடைபெற்றது. ஒரே நேரத்தில் பொன்னம்பலம், சித்சபை, கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ராஜகோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது. மேளதாளம் முழங்கிட, வேத மந்திரங்கள் ஓதிட நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாளும் சித்சபையில் இருந்து புறப்பட்டு தனித்தனி தேரில் எழுந்தருளினர். சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளும் தனித்தனி தேரில் எழுந்தருளினர்.

முதலில் விநாயகர், சுப்ரமணியர் தேர்களும், தொடர்ந்து ஸ்ரீ நடராஜர், சிவகாம சுந்தரி அம்பாள் தேர்களும் சென்றன. சிவசிவ, சம்போ மகாதேவா என்ற முழக்கங்களுடன் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். வேத மந்திரங்கள் முழங்கிட, திருமுறைகள் படித்திட, மேளதாளத்துடன், சிவனடியார்களின் நடனத்துடன் தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்றன. ஒவ்வொரு வீதியிலும் சுவாமிகளுக்கு மண்டகபடிதாரர் களால் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதணை காட்டப்பட்டது.

மேலவீதியில் பருவத கல மரபினரால் ஸ்ரீநடராஜருக்கு பட்டு சாத்தி மண்டகபடி செய்யப்பட்டு தீபாராதணை காட்டப்பட்டது. தேர்கள் இரவு கீழ வீதி நிலையை அடைந்தன. பின்னர் ஸ்ரீநடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் தேரிலிருந்து ஆயிரங்கால் மண்ட பத்தில் எழுந்தருளினார்கள். இன்று (3-ம் தேதி) அதிகாலை மகா அபிஷேகமும் மதியம் சித்சபை பிரவேசமும் (தரிசன விழா) நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT